புதுடில்லி நம் நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்தால், அதை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து மாநில அரசுகளின் தயார் நிலையையும் உறுதி செய்யும் விதமாக, நாடு முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை இன்று நடத்தப்பட உள்ளது.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, தொற்று தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சீனாவில் பரவி வரும் உருமாறிய 'பி.எப்., - 7' வகை தொற்று, நம் நாட்டில் பரவுகிறதா என்பதை எளிதில் கண்டறிய, தொற்று உறுதியாகும் நபர்களின் மாதிரிகளை, மரபணு மாற்ற வரிசைமுறையை கண்டறியும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு உருமாறிய டெல்டா வகை தொற்று பரவலின் போது நம் நாட்டில் இரண்டாவது அலை ஏற்பட்டது. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக தொற்று பாதிப்பு அதிகரித்தது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இன்றி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, மத்திய அரசு இந்த முறை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு, டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை முன்கூட்டியே உறுதி செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அவசரகால ஒத்திகையை இன்று நடத்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. இதற்கான முன் ஏற்பாடுகளில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.இன்று நடக்கவுள்ள இந்த அவசரகால ஒத்திகையை, மாநில அரசுகளின் கூடுதல் தலைமை செயலர், முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் கண்காணிக்கவும், அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தேவையான முன் ஏற்பாடுகளை செய்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுடில்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று நடக்கவுள்ள ஒத்திகையை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். உத்தர பிரதேச அரசு, ஒத்திகைக்கான பணிகளை நேற்று துவக்கியது. புதுடில்லியின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வுப் பணிகள் நேற்று துவங்கின.
படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் கருவிகளின் கையிருப்பு ஆகியவற்றை, கிழக்கு டில்லி மாவட்ட கலெக்டர் அனில் பங்கா நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். நம் நாட்டை பொறுத்தவரை, நேற்று ஒரு நாளில் 196 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் வாயிலாக, 3,428 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நம் நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.46 கோடியாக உள்ளது.
பீஹாரின் புத்த கயாவில், திபெத் மக்களின் ஆன்மிக தலைவரான தலாய் லாமாவின் சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள, வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், ஐந்து பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இது குறித்து, மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ரஞ்சன் குமார் சிங் கூறியதாவது: கயா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 33 பயணியருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் மியான்மரைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பயணியருக்கு தொற்று அறிகுறி இருப்பது உறுதியானது. இவர்கள், முன்பதிவு செய்திருந்த ஹோட்டலில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். புத்த கயாவில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள விமான நிலையம், ரயில் நிலையத்தில் தொற்றுக்கான பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.