பீஜிங், சீனாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. வயதானவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி, மருத்துவமனையில் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது.
இதை கட்டுக்குள் கொண்டு வர, அரசு கடுமையான ஊரடங்கை பிறப்பித்தது. இதனால்ஆத்திரமடைந்த மக்கள்,சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகளை அரசு கைவிட்டது.
இதன் காரணமாக நாடு முழுதும் தொற்று பரவல் தீவிரமடைந்தது.நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்குஆளாகின்றனர்; 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
முந்தைய கொரோனா பரவலை காட்டிலும், இந்த முறை சீனா கடும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சீனாவின் தற்போதைய நிலை குறித்து, பீஜிங்கை சேர்ந்த டாக்டர் ஹோவார்ட் பெர்ன்ஸ்டைன் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறேன். இதுபோன்ற மருத்துவ அவசரநிலையை, நான் இதுவரை கண்டதில்லை.
முந்தைய தொற்று பரவலின் போது கூட நிலைமை இப்படி மோசமடையவில்லை. இந்த பாதிப்பை சீனா எதிர்பார்க்கவில்லை; அதற்கு தயாராகவும் இல்லை.
மருத்துவமனைகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியநிலையில் உள்ளனர்.
அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்பும் நிலையிலும் இல்லை. எனவே, தீவிர சிகிச்சை பிரிவு துவங்கி, அனைத்து பிரிவுகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். பலரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனை வரும் நோயாளிகள் எண்ணிக்கை 5 முதல் 6 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும், 40 - 70 வயது வரையிலானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், பீஜிங்கை சேர்ந்த தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சோனியா ஜுடார்ட் தெரிவித்தார்.
இதில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், முன்களப் பணியாளர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், சிகிச்சையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பலர் தொற்று பாதிப்புடனேயே பணிக்கு வரும் சூழல் நிலவுகிறது.