வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மின் வாரியத்தின் ஒவ்வொரு பிரிவையும், முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து, எந்தெந்த செலவினங்கள் கூடுதலாக இருந்தன... அவற்றில் எதை சீரமைக்கலாம்... எந்தெந்த வகையில் வருவாயை கூடுதலாக்கலாம் என, அறிவுறுத்தினார். அதை கவனத்தில் வைத்து, மின் வாரியத்தை மேம்படுத்தும், சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வருவாய், செலவுகளுக்கு இடையேயான இடைவெளி பூஜ்யமாக குறைக்கப்படும்.
டவுட் தனபாலு: தொலைநோக்கு பார்வையுடன் சிந்திச்சு செயல்படுவதற்கு வாழ்த்துகள்... அதே நேரம், அடுத்த மூணு வருஷத்துல, மின் கட்டணத்தை உயர்த்தி, மக்கள் தலையில சுமையை ஏத்தாம, வரவையும், செலவையும் நேர்படுத்தினா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ: இந்தியா மற்றும் சீனா இடையே, துாதரக உறவு வாயிலாகவும், ராணுவ உறவு வாயிலாகவும் தகவல்கள் பரிமாறி கொள்ளப்படுகின்றன. எல்லையில் ஸ்திரத்தன்மை ஏற்படவும், அமைதி நிலவுவதை உறுதி செய்யவும், இரு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே வலுவான நல்லுறவு ஏற்படவும், சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்லவும், இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது.
டவுட் தனபாலு: 'தன் வினை தன்னை சுடும்; ஓட்டப்பம் வீட்டை சுடும்' என்பது போல, கொரோனா பூதம் இப்ப உங்க நாட்டுல கும்மியடிச்சிட்டு இருக்குது... உலகத்துக்கே தடுப்பூசிகளை சப்ளை செய்த இந்தியாவின் தயவு தேவை என்பதால் தான், வெள்ளை கொடி பிடிக்கிறீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!
![]()
|
எதிர்க்கட்சி தலைவர் அ.தி.மு.க.,வின் பழனிசாமி: கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த, காவல் துறை, 'ஆப்பரேஷன் கஞ்சா 2.0' ஆரம்பித்தது. இதன் வழியே, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கப்பட்டதா? '2.0' வெற்றி என்றால், 'கஞ்சா 3.0' நடவடிக்கையை காவல் துறை துவக்கியது ஏன் என்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வழக்கமான இரண்டரை மணி நேரத்துல ஒரு கதையை சொல்ல முடியாம, சினிமாவையே 'பார்ட் 1, பார்ட் 2'ன்னு எடுக்கிறாங்க... அந்த மாதிரி, கஞ்சாவை கட்டுப்படுத்த முடியாம தானே, 2, 3ன்னு ஆப்பரேஷன்களும் பண்றாங்க... நம்ம போலீசாரின் ஆமை வேகத்தை பார்த்தா, ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிச்ச, மிஷன் இம்பாசிபிள் படம் மாதிரி, கஞ்சா ஆப்பரேஷனும் ஏழெட்டு பார்ட் போகுமோன்னு, 'டவுட்' வருது!