சென்னை: லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழக அரசின் சாதனைகளை, மக்களிடம் விளம்பரப்படுத்தும் பணியை, தி.மு.க., துவக்கி உள்ளது.
லோக்சபா தேர்தல், 2024ம் ஆண்டில் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான ஆயத்த பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பது, ஆளும் கட்சியான தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது.
அ.தி.மு.க., அணிகளை ஒன்றிணைத்து, மெகா கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்கு, பழனிசாமி ஒத்துழைக்கவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க முடியாது என, அவர் முரண்டு பிடிக்கிறார். பழனிசாமி அணியை ஒதுக்கிவிட்டு, மற்ற அணிகள் மற்றும் சிறிய கட்சிகளை இணைத்து கூட்டணி அமைப்பது குறித்தும், பா.ஜ., ஆலோசித்து வருகிறது. லோக்சபா தேர்தல் பணிகளுக்காக, மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களிடம் உள்ள அதிருப்தியை போக்க, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் நிறைவேற்றிய திட்டங்களை, மக்களிடம் விளம்பரம் செய்ய, தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை நேற்று துவக்கியது.
'மகளிருக்கு இலவச பஸ் பயணம்; அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி கற்கும் மாணவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம்' ஆகியவை குறித்து மக்களிடம் விளக்கும் வகையில், 'தலை நிமிர்ந்த தமிழகம்; மனங்குளிருது தினந்தினம்; மகளிர் உயர மாநிலம் உயரும்; வெல்லும் திராவி மாடல்' என்ற வாசகங்களை விளம்பரப்படுத்தி வருகிறது.
இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், தமிழகம் முழுதும் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர். சுவர் விளம்பரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இது தவிர, திராவிட நல்லாட்சி என்ற பாடலுடன் கூடிய வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நேற்று, டுவிட்டரில், 'தலை நிமிர்ந்த தமிழகம்' என்ற ஹேஸ்டேக் பிரபலமானது.
இதேபோல், அரசு துறைகள் ஒவ்வொன்றிலும், அரசு நிறைவேற்றி உள்ள திட்டங்களை, மக்களிடம் விளம்பரப்படுத்த உள்ளதாக, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.