வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வரக்கூடிய லோக்சபா தேர்தல் மற்றும் தேர்தலுக்கான கூட்டணி, கட்சி தொடர்பான வழக்கு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‛பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அதுபோல் அரசியலில் போலியானவர் ஓபிஎஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்' என்றார்.
அதேபோல் அதிமுக.,வில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த குரல் எழுப்பினர். பின்னர் கூட்டணி தொடர்பான ஆலோசனையின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திமுக.,வின் ‛பி டீம்' ஆக ஓபிஎஸ் செயல்படுகிறார். அவருடன் இணைந்து செயல்படுபவர்கள் அனைவரும் துரோகிகள். அதிமுக சரியான பாதையில் பயணிக்கிறது. மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், ‛அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமைக்கப்படும்' எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, பார்லிமென்ட் தேர்தலுக்கான பணிகளை துவங்கிடுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
‛பாஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டளிக்க மாட்டார்கள். பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தால் அதிமுக.,விற்கே இழப்பு அதிகம். எனவே பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்.' என சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தாக தகவல் வெளியானது.
பா.ஜ., கட்டுப்படுத்தவில்லை

அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ., கூட்டணிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகள் சிலர் பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பேசிய பழனிசாமி, ‛‛அதிமுக.,வை பா.ஜ., கட்டுப்படுத்தவில்லை.
100 சதவீதம் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என எப்போதும் வற்புறுத்தியது இல்லை. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜ., தலையிடுவதில்லை. எனவே பா.ஜ., குறித்து யாரும் அவதூறாக பேச வேண்டாம்'' நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
'அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை' : ஜெயக்குமார்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலா, பன்னீர் செல்வம், தினகரன் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
உட்கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை இல்லாத ஒரு விஷயம் குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. பார்லி., தேர்தல் குறித்த பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினோம். திமுக அரசு மீது மக்கள் கடும் கோபம்.
எங்கள் நோக்கம் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டும் தான். அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.