அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:தற்போதைய
மீன்வளத் துறை அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, இந்த துறையை பற்றி ஒன்றும்
தெரியாது. அவர் ஒரு பணக் கணக்கு பார்க்கும் வியாபாரி; மக்களின் நலனை
பார்த்து செயல்படவில்லை. தி.மு.க., அரசின் எந்த துறைகளிலும், மக்கள் நலப்
பணிகள் எதுவுமே நடக்கவில்லை.
தி.மு.க., அரசில் தானே, உதயநிதி அமைச்சராகி இருக்கார்... அது, 'முதல்வரின் மக்கள்' நலப் பணி இல்லையா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அமைச்சர் உதயநிதி, தன்னை கிறிஸ்துவர் என்றும், இஸ்லாமியர் என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகபேசியுள்ளார். போகிற போக்கை பார்த்தால், தன் பெயரே சமஸ்கிருதம் தான்.
அதனால் தானும் ஒரு, 'பண்டிட்' என்று சொல்லிக் கொள்வதில், இறுமாப்பு அடைவதாகக் கூட, அவர் சொல்வார். ஓட்டு வங்கி அரசியல் எப்படியெல்லாம் பேச வைக்கிறது பாருங்கள்.
எந்த இடத்திலும், மறந்தும் கூட ஹிந்து என சொல்ல மாட்டேங்கிறாரே... 'இளிச்சவாயர்களின் ஓட்டுகள் எப்படியும் நமக்கு விழுந்திடும்' என்ற எண்ணம் தானே இதற்கு காரணம்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'பா.ஜ.,வினர், தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டால், அவர்களுடன் கை கோர்க்கவும் தயங்க மாட்டோம்' என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேச பக்தி, தெய்வ பக்தி, ஊழலற்ற ஆட்சி, மக்கள்நலன், உண்மையான சமூக நீதி போன்ற கொள்கைகளை, பா.ஜ., என்றும் மாற்றிக்கொள்ளாது; அதற்கு எதிராக கைகோர்ப்பவர்களை கைவிடவும் தயங்காது.
இந்த கொள்கைகளுக்கும், திருமாவளவன் கட்சிக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே... இதனால, அவர் உங்க பக்கம் வந்துடுவாரோன்னு நீங்க பயப்படவே வேண்டாம்!
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பேட்டி: மத்திய அரசு, 2023ம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதை கொள்கை பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ள மாநில அரசு, சிறுதானிய ஆண்டு என்ற கொள்கை முடிவை குழிதோண்டி புதைக்கும் வகையில், ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது; இதை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக, தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள், 'கார்ப்பரேட்' ஆட்சியாக தி.மு.க., மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தேர்தலில் ஜெயிப்பதற்காக, கார்ப்பரேட் கம்பெனியோட ஒப்பந்தம் போட்ட அரசிடம், வேறு எதை எதிர்பார்க்க முடியும்?