தமிழகத்தில், 'மக்கள் எண்' எனப்படும் 12 இலக்க எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு, நலத் திட்டங்களை அளிக்க, இந்த அட்டை உதவியாக இருக்கும் என, தமிழக அரசு தனி காரணம் கூறினாலும், 'இது வேண்டாத வேலை' என்றே பல தரப்பிலும் பேசப்படுகிறது. நாடு முழுதும் ஒரே அடையாள அட்டையாக 'ஆதார்' இருக்கும்போது, அனாவசிய செலவு எதற்கு என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
தமிழக மின்னாளுமை முகமையால், 'மக்கள் எண்' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான, சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள், குடிமக்கள் பெட்டகத்தில் இருந்து விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்து தானாகவே வழங்கப்படும்.
ரத்து
இதை, தனிநபர் தன்னுடைய மொபைல் போன் எண்ணை பயனர் குறியீடாகவும், ஒரு முறை கடவுச் சொல்லை பயன்படுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.
'மக்களைத் தேடி அரசு' என்ற இந்த திட்டம், 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ளதாக, 2019 ஜூலை 12ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் அறிவித்தார்.
அதே ஆண்டு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்து செயல்படுத்த, முதல் கட்டமாக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்பின், படிப்படியாக திட்டத்தை செயல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பணிக்காக 'டெண்டர்' விடப்பட்டு, பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
பணி தாமதம்
தற்போது, தி.மு.க., அரசு வந்ததும், தமிழக மின்னாளுமை முகமை சார்பில், மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க, ஜன., 9ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
'மக்கள் எண்' என்பது 12 இலக்க எண்களைக் கொண்டது. இந்த எண்ணைப் பெற, மொபைல் போன் அவசியம். இந்த எண்ணைப் பெற்றால், அது ஒவ்வொரு அரசுத் துறை தொடர்பில் இருக்கும். எனவே, அரசு சேவைகளை, ஒவ்வொருவரும் எளிதாக பெற முடியும் என, தமிழக அரசு கூறுகிறது.
தற்போது, பொது மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு இருந்தாலும், அரசு துறையிடம் ஆதார் எண் பெற்றவர்கள் குறித்த விபரம் முழுமையாக இல்லை. பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் எண் தரும்படி வற்புறுத்தக் கூடாது என, நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்களிடம் ஆதார் கேட்டு கட்டாயப் படுத்தப்படாததால், இப்பணி தாமதமாகி வருகிறது.
இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'மக்கள் எண்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு சேவைகளை மக்கள் பெறுவதற்கு உதவவே இந்த எண் என்று, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மொபைல் போன் நிறுவனங்கள் உட்பட, அனைத்து தனியார் நிறுவனங்களும், தங்கள் சேவையை பெற, வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் பெறுகின்றன.
ஆதார் அவசியம்
தமிழகத்தை பொறுத்தவரை 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 'காஸ்' இணைப்பு பெற, வங்கி கணக்கு துவங்க என, அனைத்துக்கும் ஆதார் எண் அவசியமாகி உள்ளது.
அரசு துறைகளும் நலத் திட்டங்கள், மானியங்கள் பெற, ஆதார் எண் அவசியம் என வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், 'மக்கள் எண்' என்ற புதிய அடையாள அட்டை வழங்குவது வேண்டாத வேலை என, சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கருதுகின்றனர்.
மக்களின் ஆதார் எண்ணை முழுமையாக பெற்றால், அவர்கள் குறித்த தகவல்களை பெற முடியாதா, இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள அட்டை வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா என, நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் மக்கள் ஐ.டி., என்ற பெயரில் புதிய எண் வழங்க கோடிக்கணக்கான ரூபாயை செலவிட வேண்டுமா என, சரமாரியான கேள்விகள், சமூக வலைதளங்களில் அனல் தெறிக்கின்றன.
- நமது நிருபர் -