சென்னை: ''மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க, அனைவரும் பாடுபட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள, சென்னை கிறிஸ்துவக் கல்லுாரியில், 81வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது:
வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல. நம்மை நாமே அறிந்துகொள்ள, வரலாற்றை படித்தாக வேண்டும். கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்.
கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்கின்றனர். அதை நம்பி ஏமாந்து விடக் கூடாது. இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து, இந்த வரலாற்றுத் திரிபுதான். கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும் அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும்.
நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான்; ஆனால், பழமைவாதிகள் அல்ல. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில்தான், எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழர்களின் கடல் கடந்த பயணம், அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக, அருங்காட்சியகம் அமைக்க உள்ளோம்.
பொருநை நாகரிகத்தை, நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழக மக்கள் இடையே, மிகப்பெரிய வலாற்று உணர்வை விதைத்திருக்கிறது.
இவ்வாறு, முதல்வர் பேசினார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, அன்பரசன், இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் கேசவன் வேலுதத் பங்கேற்றனர்.