வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஐவரணியினர், கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற, ஐவரணியில் உள்ள கோஷ்டி தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதனால், அழகிரி தலைமையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், கோஷ்டி தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, செல்வப்பெருந்தகை ஆகிய ஐவரும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.
சோனியா பிறந்த நாள், கிறிஸ்துமஸ், நுால் வெளியீடு உள்ளிட்ட விழாக்களில், அழகிரி பங்கேற்றதால், இவர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சென்னையில் இன்று எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் நடக்கும் கக்கன் சிலை திறப்பு விழாவில், அழகிரி பங்கேற்கிறார். ஐவரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
ஆனால், புதிய தலைவர் பதவி ஏற்கும் வரை, கட்சி அலுவலகம் வருவதில்லை என, ஐவரணி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், இன்று கட்சியின், 138வது ஆண்டு விழாவை ஒட்டி மாரத்தான் ஓட்டம்; 150 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இவற்றையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க, கோஷ்டிகள் முடிவு செய்துள்ளன.
அதேபோல நாளை, ராகுல் நடைபயணத்தை முன்னெடுக்கும் வகையில், 'கையோடு கைகோர்ப்போம்' என்ற பிரசாரத்தை துவக்குவது குறித்து, மாவட்டத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவும், அழகிரி திட்டமிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஐவரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் புறக்கணிப்பதுடன், தங்களது ஆதரவு மாவட்டத் தலைவர்களுக்கும் தடை போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -