சென்னை: கூட்டணி குறித்து கவலைப்படாமல், கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனிக்கும்படியும், கிராமங்கள்தோறும் 'பூத் கமிட்டி' அமைக்குமாறும், மாவட்ட செயலர்களுக்கு, பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தரப்பு மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், பகல் 12:30 மணிக்கு நிறைவடைந்தது.
முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோர் பேசினர்.
அவர்களில் சீனிவாசன், விஸ்வநாதன் ஆகியோர் பேசுகையில், 'பொருட்களில் போலி இருப்பதுபோல, அரசியலில் பன்னீர்செல்வம் போலி. பன்னீர்செல்வம் அணியினரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது. போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும்' என, கூறினர்.
பழனிசாமி பேசியதாவது:
கட்சி பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும். அதன் பின், கட்சி பிரச்னை முடிவுக்கு வந்து விடும்.
கட்சி பிரச்னையில் பா.ஜ., தலையிடவில்லை. கட்சி பிரச்னை, கூட்டணி போன்றவற்றை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
நீங்கள் லோக்சபா தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேர்தல் பணிகளை துவக்குங்கள். கிராமங்கள்தோறும் 'பூத் கமிட்டி' அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 18 பேர் இடம் பெற வேண்டும்.
முன்பு, கிராமங்களில் நமக்கு ஆதரவு அதிகம். தற்போது நகரங்களிலும் ஆதரவு அதிகமாக உள்ளது. வீடு வீடாகச் சென்று, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துரையுங்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கிய பிரச்னைகளை வலியுறுத்தி, உள்ளூர் அளவில் போராட்டங்களை நடத்துங்கள். தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகம். எனவே, தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமி வந்தபோதும், அவர் சென்றபோதும், வரவேற்க கட்சியினர் முண்டியடித்தனர். அப்போது, தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றிய செயலர் உச்சிமாகாளி என்பவர் 'பேன்ட்' பையில் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி விட்டனர்.பணம் திருட்டு போனது குறித்து, அங்கிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்; விசாரித்து வருகின்றனர்.