வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை :'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், தி.மு.க.,வினர் தீவிர கவனம் செலுத்த வேண்டியது பா.ஜ., மீது தானே தவிர, அ.தி.மு.க., மீது அல்ல' என, சென்னையில் நேற்று நடந்த தி.மு.க.,வின் அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 'வெற்றி பெற எதையும் செய்ய தயங்காத பா.ஜ.,வை எதிர்கொள்ள, இப்போதே தயாராக வேண்டும்' என, கட்சியினருக்கு அவர் கட்டளையிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தி.மு.க.,வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
23 அணிகள்
தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் இளைஞரணி, மகளிரணி, விவசாய அணி, மாணவரணி உள்ளிட்ட, 23 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சியில் உள்ள 23 அணி நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்ய, துணை பொதுச் செயலர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராஜா, பொன்முடி ஆகியோர் அடங்கிய குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.
கூட்டத்தில் முதல்வர் பேசியுள்ளதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும். அதற்காக இப்போதே தேர்தல் பணிகளை துவக்க, அனைவரும் தயாராகுங்கள்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ.,வினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். பா.ஜ.,வினரை எதிர்கொள்ள, நீங்கள் தயாராக இருங்கள். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டியது, பா.ஜ., மீது தான்; அ.தி.மு.க., மீது அல்ல. ஏனெனில், அக்கட்சி பல பிரிவுகளாக சிதறிவிட்டது.
ஆயத்த பணி
எனவே, பா.ஜ.,வை எளிதாக எடை போடாமல், இப்போதே அக்கட்சியை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை அடிமட்ட அளவில் செய்யுங்கள். கட்சியில் அணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், தங்கள் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து, இவ்விஷயத்தில் முழு ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். குழு மனப்பான்மையோடு, தனித்து பணியாற்ற நினைக்கக் கூடாது.
உங்களுக்கு கட்சியில் வழங்கியுள்ள பதவியை பெருமையாக கருதிக் கொண்டு இருக்காமல், முழுமையாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். அணிகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.ஒவ்வொரு அணியின் செயல்பாடும் பாராட்டத்தக்க வகையில் இருக்க வேண்டும். அனைத்து அணிகளும் ஒருங்கிணைந்து, தேர்தல் பணிகளை மேற்கொண்டு, வெற்றிக் கனியை பறிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக தெரிகிறது.
அணிகளின் நிர்வாகிகள் சிலர் பேசியதாவது:
அணிகளின் சார்பில் மாநாடுகள் நடத்த அனுமதி தர வேண்டும். கட்சி நிகழ்ச்சி 'போஸ்டர்'கள், துண்டு பிரசுரங்களில், அணிகளின் நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிடாமல், மாவட்ட செயலர்கள் புறக்கணிக்கின்றனர். கட்சி விழாக்களுக்கு, அணி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுப்பதில்லை. அணி நிர்வாகிகளை நியமிப்பதில், மாவட்ட செயலர்கள் சொல்வதை கேட்க வேண்டிய நிலையே உள்ளது; அதை தவிர்க்க வேண்டும். எங்களையும் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் மதிக்க வேண்டும்; உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
தமிழக காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, இரண்டு தொகுதிகளை பறித்து, மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க.,வுக்கு கொடுக்க, தி.மு.க., தரப்பில் ஆலோசித்த தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கியது. அதில், ஒன்பது தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.இந்த தேர்தலில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாத நிலை, தி.மு.க., கூட்டணிக்கு உள்ளது. எனவே, காங்கிரசுக்கு கடந்த முறை போல், 10 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., விரும்பவில்லை. கூட்டணியில் கூடுதல் கட்சிகளை சேர்த்து வலு சேர்க்க நினைக்கிறது.எனவே, காங்கிரசிடம் இருந்து இரண்டு தொகுதிகளை பறித்து, மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று கொடுப்பது குறித்து, தி.மு.க., தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.தென் சென்னை அல்லது ராமநாதபுரத்தில் கமல்; கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க., இளைஞரணி தலைவர் சுதீஷ் போட்டியிடும் வகையில், கூட்டணி பங்கீடு நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
தமிழக காங்., தலைவர் அழகிரிக்கு, கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போது, அவரது தலைவர் பதவி காலியாகும் சூழல் காணப்படுகிறது. எனவே, லோக்சபா தேர்தலில் கடலுார் தொகுதியில் போட்டியிட, அழகிரி விரும்புகிறார். அதனால், சமீப காலமாக அவர், முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார்.