தி.மு.க., செய்தி தொடர்பு செயலர், டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி: 'தி.மு.க.,வை குடும்ப கட்சி' என, ஜே.பி.நட்டா கூறினார். குஜராத்தில் உள்ள இரண்டு பணக்காரர்களுக்கு, இடைத்தரகர் வேலை செய்யும் கட்சியாக, பா.ஜ., இருந்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை, அவர்களிடம் விற்பதற்கான கட்சியாக விளங்குகிறது. இதற்கு நட்டா என்ன பதில் சொல்லப் போகிறார்?
* நட்டாவின் குற்றச்சாட்டுக்கு பதில் தராமல், மறு கேள்வி எழுப்புவதில் இருந்தே, தி.மு.க., குடும்ப கட்சி என்பதை ஏற்றுக் கொள்றீங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமியை விட்டு பலர் விலகும் முடிவை தடுக்கவே, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், தரம் தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகித்து, அவரை அவமதித்து வருகிறார் ஜெயகுமார். பா.ஜ.,வுக்கு எதிராக, சி.வி. சண்முகத்தை பேச சொன்னவர் பழனிசாமி தான்.
பா.ஜ.,வுக்கு எதிராக பழனிசாமி இருக்காரோ, இல்லையோ... பழனிசாமிக்கு எதிராக, பா.ஜ.,வை நீங்க நல்லாவே கொம்பு சீவுறீங்க!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: எங்கள் பங்காளிகள், ஆள் பிடிக்கும் வேலை செய்து வருகின்றனர். மாநிலம் முழுதும் எங்கள் ஆட்களை பிடிக்க, 200 முதல் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். தற்போது இருவர் சென்றுள்ளனர். எங்களை கண்டு அவர்களுக்கு பயம் உள்ளது. அவர்கள் ஒரு நிர்வாகியை பிடித்தால், மறுநாளே புதிய நிர்வாகியை நியமிக்கிறோம். எனவே, எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
உங்க ஆட்களை பிடிக்க, டீயும், பன்னும் போதும்னு எதிரணியினர் சொல்றாங்க... நீங்களோ கோடிகளில், 'பில்டப்' தர்றீங்களே!
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி பேச்சு: 'மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்' என்பர். எட்டு வழிச்சாலை திட்டத்தை நாம் கொண்டு வந்த போது, 'மோசம்' என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர். அவர்கள் கொண்டு வந்தால், 'சரி' என்கின்றனர்.
பொங்கல் பரிசாக உங்களிடம், 5,000 கேட்டவங்க, இப்ப, 1,000 ரூபாய் மட்டும் தானே தர்றாங்க... அவங்களுக்கு என்றால் தனி சட்டம் தான்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: 'அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. இது, சர்க்கரை கார்டு வைத்திருப்போரிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சர்க்கரை அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி அட்டைக்கு விண்ணப்பித்து, கார்டு கிடைக்கப் பெறாதவர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இப்பத்தான் கரும்பு தர்றோம் என இறங்கி வந்திருக்காங்க... மறுபடியும், அடுத்த கோரிக்கையை வச்சா என்ன அர்த்தம்?