ஹைனா (Hyena) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கழுதைப்புலி, சிறு பிராணிகளை வேட்டையாடும் மாமிச பட்சினி. இதன் கூர்விழிகள், கோரைப் பற்கள், தடிமனான நாக்கு, கருப்புள்ளிகள் கொண்ட பழுப்பு நிற தோல், ரோமம் உள்ளிட்டவை காண்போரை கதிகலங்கச் செய்யும். ஆஃப்ரிக்க கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கழுதைப்புலிகளில், அவற்றின் மீதுள்ள வரிகளைப் பொறுத்து நான்கு வகைகள் உண்டு. அராட்வுல்ஃப், ஸ்ரைஃப்டு ஹைனா, பிரவுன் ஹைனா, ஸ்பாட்டட் ஹைனா என கழுதைப் புலிகள் இனம் பிரிக்கப்பட்டுள்ளன.
![]()
|
அழிந்துவரும் மாமிசபட்சினியான கழுதைப் புலிகள் பறவைகள், பாம்பு உள்ளிட்ட ஊர்வன, சிறு விலங்குகளை வேட்டையாடி உண்ணுபவை. இவற்றுக்கு ஓர் சிறப்பம்சம் உண்டு. விலங்குகளால் மனிதர்கள்போல மகிழ்ச்சியை வெளிப்படுத்த சத்தமாக சிரிக்க இயலாது. ஆனால் கழுதைப் புலிகளால் சிரிக்க முடியும். 'புஹா..ஹா...ஹா...' என அடிவயிற்றில் இருந்து வாய் விட்டு சிரிக்கும் உலகின் ஒரே விலங்கு கழுதைப் புலிதான். கழுதைப் புலிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பம்சம் எனத் தெரிந்துகொள்ளலாம்.
கழுதைப் புலிகள் எழுப்பும் சப்தம் மனிதர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதுபோல இருந்தாலும், அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் இவ்வாறு சத்தம் எழுப்புவதில்லை. இரையை கண்டுவிட்டால் தனது கூட்டாளிகளுக்கு தகவல் அளிக்க, பயம், பதற்றம், கோபத்தை வெளிப்படுத்த இவ்வாறு சப்தம் எழுப்புகின்றன. சிங்கம், புலி உள்ளிட்ட பெரிய விலங்குகள் தாக்கவந்தால் அவற்றை எச்சரிக்கவும் இதுபோல கழுதைப்புலிகள் சிரிக்கும் ஒலி எழுப்பும்.
![]()
|
அதிக டெசிபல் ஒலி எழுப்பும் விலங்குகளுள் கழுதைப் புலியும் ஒன்று. நடு காட்டில் இரவில் கழுதைப்புலியின் சிரிப்பைக் கேட்டால் மனிதர்களுக்கே பீதி கிளம்பும். அதிக ஸ்தாயி (high pitch) கொண்ட விலங்குகளுள் ஒன்றான கழுதைப் புலியின் ஸ்தாயி அளவு மைக்கேல் ஜாக்ஸன் போன்ற பாடகரின் உச்சஸ்தாயி அளவை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.