வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ரிமோட் ஓட்டுப்பதிவு இயந்திரம் (ஆர்.வி.எம்) தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு தமிழக தேர்தல் கமிஷன் சார்பில் அதிமுக.,விற்கு விடுக்கப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதிமுக.,வில் இரட்டை தலைமை பிரச்னை வெடித்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் பழனிசாமி. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு பழனிசாமி தாக்கல் செய்த அதிமுக.,வின் 2021-22 நிதியாண்டுக்கான வரவு-செலவு கணக்கை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டது. அதேபோல், ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்திற்காக மத்திய அரசு விடுத்த அழைப்பிலும் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முறையை நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொள்ள உள்ள ஆலோசனை கூட்டத்திற்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பெயரை குறிப்பிட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால், இடைக்கால பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசு தரப்பில் அங்கீகரித்ததாக பழனிசாமி தரப்பு மகிழ்ச்சி அடைந்தது. இந்த நிலையில், ரிமோட் ஓட்டுப்பதிவு முறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு தமிழக தேர்தல் கமிஷன் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்தஊர்களை விட்டு இந்தியாவிற்குள் வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக ரிமோட் ஓட்டுப்பதிவு இயந்திரம் (ஆர்.வி.எம்) செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பற்றி வரும் ஜனவரி 16ல் அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் கமிஷன் செயல்முறை விளக்கம் தருகிறது. இதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த செயல்முறை விளக்கம் தொடர்பாக ஜனவரி 31ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் கருத்துகளை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு அதிமுக கட்சிக்கு மாநில தேர்தல் கமிஷன் விடுத்த அழைப்பு கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக.,வில் மீண்டும் இரட்டை தலைமை குறித்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.