வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி, தனது தாயார் காலமான விஷயத்தில் தேவையற்ற கூட்டத்தை தவிர்ததுடன் சில மணி நேரங்களிலேயே அரசு பணிகளை துவக்கினார்.

தனது தாயார் ஹீராபென் காலமானார் என்ற செய்தி பிரதமர் மோடிக்கு கிடைத்ததும் டில்லியில் இருந்து அவர் இரவு தூங்கவில்லலை என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. கவலைக்கிடமாக இருந்த தாயார் அதிகாலை 3.35 மணியளவில் காலமான செய்தி அறிந்ததும் டில்லியில் இருந்து ஆமதாபாத் வந்தார். பின்னர் காரில் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திரபட்டேல் மட்டும் வந்தார். எந்தவொரு அரசியல் கரை வேட்டிகளையும் காண முடியவில்லை. மேலும் மத்திய அமைச்சர்கள் உள்பட எந்தவொரு முக்கிய நபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
வீட்டுக்குள் சென்ற மோடி சில நிமிடங்களில் தாயார் உடலை தோளில் சுமந்து வாசலில் நின்ற வேனில் ஏற்றினார். பின்னர் சாதாரண நபர் போலவே தாயாரின் அருகில் வேனில் அமர்ந்தார். அவரது முகத்தில் கவலை வெளியே தெரியாமல் பார்த்து கொண்டாலும் சற்று இறுக்கமாகவே இருந்தார்.

பொதுவாக முக்கிய தலைவர்களின் உறவினர் என்றால் பல்வேறு அரசு அதிகாரிகள் முதல் பெரும் விஐபிக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தும் வழக்கத்தை பிரதமர் துச்சமென எதையும் எதிர்பார்க்காமல் உடைத்தெறிந்தார் என்றே சொல்லலாம்.
ஆளும் பா.ஜ., கட்சிக்கார்களோ, அமைச்சர்களோ யாரும் வர வேண்டாம் அவரவர் பணியை பாருங்கள் என பிரதமர் மோடி வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனால் யாரும் மலர் வளையத்தை சுமந்து கொண்டு வருவதை பார்க்க முடியவில்லை. அவர் நினைத்திருந்தால் அரசு மரியாதையுடன் கூட அம்மாவின் தகனத்தை நடத்தியிருக்கலாம். ஆனால் பிரதமர் சாமானிய மனிதனாகவே நடந்து கொண்டார்.
கூட்டத்தை தவிர்த்த பிரதமர்
பிரதமர் மோடி இவ்வளவு வேகமாக இறுதிச்சடங்கை முடித்ததற்கு அவருடைய எளிமை , மற்றும் தேவையற்ற நேர விரயத்தை தவிர்த்தல் என்பதே நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. 2 நாள் , 3 நாள் அம்மாவின் உடலை வைத்து உள்ளூர் முதல் உலக தலைவர்கள் வரை வந்து குவிய வைப்பதை பிரதமர் மோடி தவிர்த்திருக்கிறார் என்பது உண்மை.

மயானத்தில் அம்மாவுக்கு நெற்றியில் விபூதி, சந்தனம் பூசி, சிதைக்கு தீ மூட்டினார் மோடி. 6 மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்தன. பின்னர் இறுதிச்சடங்கு முடிந்ததும் திட்டமிட்டபடி பிரதமர் , மேற்குவங்கம் வந்தே பாரத் ரயில் சேவையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் காந்திநகரில் இருந்தபடி காலை 11;30 க்கு துவக்கி வைத்தார்.

பணியை தொடருங்கள்
மோடி குடும்பத்தினர் தரப்பில், '' இந்த கடினமான காலங்களில் பிரதமர் மோடியின் தாயார் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் அவரை தங்களது மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். திட்டமிட்டபடி தங்களது பணியை தொடருங்கள். அதுவே, ஹீராபென்னுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்'' என தெரிவித்துள்ளனர்.
" நேர்மையாக வாழ வேண்டும் என கடந்த பிறந்தநாளில் தாயார் மோடியிடம் கூறியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆம் அம்மா சொன்னபடியே வாழ்ந்து காட்டுகிறார் பிரதமர் மோடி.