உலகளாவிய பொருளாதார மந்த நிலை அச்சம், நிறுவனங்களின் செலவு குறைப்பு நடவடிக்கை போன்றவை காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்ட ஐ.டி., ஊழியர்கள், வேலை தேட துவங்கிய அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய பணியிடங்களில் சேர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வால்ஸ்டீரிட் ஜர்னல், மனிதவள மேம்பாட்டு நிறுவனமான ஜிப் ரெக்கூருட்டர் (ZipRecruiter ) சர்வேயை குறிப்பிட்டு, தொழில்நுட்ப துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் கிட்டத்தட்ட 79 சதவீதம் பேர், 3 மாதங்களுக்குள் புதிய வேலையில் சேர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேநேரம் ஐ.டி., ஊழியர்கள், ஏற்கனவே பெற்ற ஊதியத்தை விட அதிகமாக அல்லது குறைவாக பெற்றார்களா என்பதை பற்றி அதில் குறிப்பிடவில்லை..
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது: -
2008ம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலையை போன்று, உலக பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடுமென்ற அச்சம் காரணமாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை கையில் எடுத்தன. கூகுள், அமேசான் போன்று பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023ம் ஆண்டிலும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ளனர்.
![]()
|
2022ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 91 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலையை இழந்தனர். இந்தியாவில் 17,000க்கும் மேற்பட்டோர் வேலையை இழந்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட 10ல் 4 ஐ.டி ஊழியர்கள், வேலையை தேட துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே புதிய வேலையை பெற்றுள்ளனர். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் வேலை கிடைத்த ஐ.டி., ஊழியர்களில் சுமார் 5 சதவீதம் பேர் மட்டும், வேலைக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
ஜிப் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜூலியா பொல்லாக் கூறுகையில்,'முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம், புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்துதல், செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என தொடர்ந்த போதும், பெரும்பாலான ஊழியர்கள் விரைவாக மறுபடியும் வேலைக்கு சேர்ந்தது முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். மேலும், ஐ.டி., மட்டுமின்றி, பொழுதுப்போக்கு, போக்குவரத்து, டெலிவரி, உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும், விரைவாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.