பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், அதற்கான தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதில், வென்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க, தமிழக அரசு மீண்டும் ஒரு போட்டி தேர்வு நடத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
* தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எந்த அளவுக்கு, 'அப்டேட்' ஆக இருக்கின்றனர் என்பதை அறிய வேண்டாமா?
***
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சென்னை முழுதும் பல்வேறு சாலைகளில், மின்சாரத் துறை உட்பட, பல்வேறு துறைகள் சார்பில் தோண்டப்படும் பள்ளங்களில் அள்ளப்படும் மணல், கற்கள், குப்பை கூளங்கள், அந்தந்தப் பகுதி விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் குவிக்கப்படுகின்றன. இதனால், மைதானங்கள் குப்பை தொட்டிகளாக அலங்கோலமாக மாறி வருவது கொடூரம். இது, நிர்வாக சீர்கேட்டின் வெளிப்பாடு.
விளையாட்டு துறை அமைச்சராகியுள்ள உதயநிதிக்கும், இதுக்கும் சம்பந்தம் இருக்காது என, நம்புவோம்!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று ஏற்படும் அனைத்து விபத்துகள், குடும்ப பிரச்னைகள், கொலை சம்பவங்கள் அனைத்துக்கும் அடிப்படை காரணம் மது. ஆனால், புத்தாண்டுக்கு மது விற்பனை இரண்டு நாட்களில், 400 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்படுகிறது. உயிர் காக்கும் மருந்துக்கு தட்டுப்பாடு; உயிரை எடுக்கும் மதுவுக்கு தட்டுப்பாடு கிடையாது. மக்கள் நலன் கருதி, இன்றும், நாளையும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
புத்தாண்டுக்கு, 400 கோடிக்கு, 'சரக்கு' வித்தா தானே, பொங்கலுக்கு குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் இனாம் கொடுக்க முடியும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை: திருச்சியில் முதல்வர் பங்கேற்ற விழாவில், அமைச்சர் நேரு பேசுகையில், 'பேரரசு போல் தளபதி; சிற்றரசு போல் உதயநிதி' என்று கூறியுள்ளார். ஆக, தி.மு.க., ஜனநாயக கட்சி இல்லை. அரச குடும்பம் என்பதை மேடையில் நேரு உறுதி செய்துள்ளார்.
நேரு இப்படி பேசி, தங்களை போன்ற அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் என்பதையும் சொல்லாம சொல்லியிருக்கார்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை, அரசே ஏற்று நடத்தும்' என, தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது, ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரின் பின்னணியோடு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி, ஆலையை அவர்கள் வசம் எடுத்துக் கொள்ள இருப்பதாக, விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆளுங்கட்சியும், அரசும் ஒன்று என கருதி விட்டனர் போலும்!