வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'சென்னை மெரினா கடலில், 137 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து, பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம், ஜன., 31ல் நடத்தப்படும்' என, மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதன் அருகில் கடலில், 137 அடி உயர பேனா நினைவு சின்னத்தை, 81 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
அறிக்கை
இதற்கு அனுமதி கோரி, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திடம், பொதுப்பணித் துறை விண்ணப்பித்தது. தேசிய ஆணையத்தின் வல்லுனர் குழு, இத்திட்டத்துக்கு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், சூழலியல் அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டம் தயாரிக்க உத்தரவிட்டது.
இந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, மீனவர்கள் அதிகம் பங்கேற்கும் வகையிலான கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி, அதன் அறிக்கையை சேர்த்து அனுப்ப வேண்டும். பேனா நினைவு சின்னத்தால், கடலில் மீன் வளம், கடல் சார்ந்த சூழலியல் மற்றும் கடல் ஆமை உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், இத்திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, முறையான விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது.
கருத்து கேட்பு கூட்டம்
மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு:
பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், 2023 ஜன., 31ல் நடத்தப்படும். சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10:30 மணிக்கு நடத்தப்படும். மாவட்ட நீதிபதி அல்லது கலெக்டர் அல்லது அவரது பிரதிநிதியாக கூடுதல் மாவட்ட நீதிபதி தலைமையில், மாசு கட்டுப்பாடு வாரிய பிரதிநிதி உதவியுடன் கூட்டம் நடத்தப்படும்.

அறிக்கை
வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை மற்றும் அதன் செயல்முறை திட்ட சுருக்க வரைவு, சூழலியல் அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசர கால செயல் திட்டம் குறித்த அறிக்கை, பொது மக்கள் பார்வைக்காக, சென்னையில் 15 இடங்களில் வைக்கப்படும்.
பொது மக்கள் இத்திட்டம் குறித்த தங்கள் கருத்துகளை, அதற்கான கூட்டத்தில் வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கலாம். கூட்டத்துக்கு வர இயலாதவர்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அரும்பாக்கம் அலுவலகத்துக்கு எழுதி அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேனா நினைவு சின்னம் தொடர்பான, விரிவான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களின் வரைவு பிரதிகள், 15 இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.சென்னை கலெக்டர் அலுவலகம், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையம், கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மண்டல அலுவலகம், மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை ஆகிய இடங்களில், இந்த ஆவணங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.இத்துடன், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், எழும்பூர், மயிலாப்பூர், வேளச்சேரி, கிண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லுார் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும், இந்த ஆவணங்கள் வைக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.