வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க., அரசின் செயல்பாடு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்க, அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்திருப்பதால், அகவிலைப்படி உயர்வை அரசு ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., அவர்களுக்கு ஆதரவு அளித்தது.'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.அதை நம்பிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தனர். தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதும், தாங்கள் வெற்றி பெற்றது போல் மகிழ்ந்தனர்.

கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி விடும் என நம்பினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை.
போராட வேண்டிய கட்டாயம்
ஈட்டிய விடுப்பை சரண் செய்து, ஊதியம் பெறும் நடைமுறையை, கருணாநிதி கொண்டு வந்தார். கடந்த ஆட்சியில் கொரோனா காரணமாக, ஈட்டிய விடுப்பை சரண் செய்து ஊதியம் பெறுவது நிறுத்தப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஈட்டிய விடுப்புக்கு ஊதியம் பெறலாம் என, அரசு ஊழியர்கள் நம்பினர். ஆனால், இதுவரை அரசு கண்டுகொள்ளவில்லை.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும், அரசு மவுனம் காத்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜூலை 1 முதல், நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், இதுநாள் வரை அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அரசு மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதை, சங்க நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக, சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடும் அதிருப்தி
'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதேபோல், மற்ற அமைப்புகளும் புத்தாண்டில் போராட்டத்தில் ஈடுபட ஆலோசித்து வருகின்றன.இதை அறிந்த தமிழக அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க ஆலோசித்து வருகிறது. ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு வழங்க, அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் அரசு ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை அறிவித்து, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது; அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என்ன முடிவெடுக்கப் போகின்றன என்பது, இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.
- நமது நிருபர் -