வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கிருஷ்ணகிரி : ''நாங்கள் அரசியல்வாதிகள். தேர்லுக்கு முன் பார்ப்போரை எல்லாம் கையெடுத்து கும்பிடுவோம். வெற்றி பெற்ற பின் கண்ணே தெரியாது,'' என, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேசினார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் மற்றும் பயனாளிகள் உள்பட, 6,675 பேருக்கு, 1.29 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது: நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள். தேர்தலுக்கு ஒரு மாதம் முன், பார்ப்பவர்களை எல்லாம் கும்பிடுவோம். எங்கள் வேலுார், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன், தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, அங்கு நின்ற, 200 பேரை பார்த்து கும்பிட்டு ஓட்டு கேட்டார். ஒரே இடத்தில், 200 ஓட்டை வாங்கி விடலாம் என்று அவர் நினைத்தார். அவர்களோ, 'எங்கள் ஊர் சித்துார்; ஒரு வேலையாக இங்கு வந்தோம்' என கூறியுள்ளனர்.

அதுபோல, குழந்தைகள் அழும்போது சாக்லெட் கொடுப்பது போல, மக்களுக்கு என்ன தேவையோ அப்படி செய்வோம். துாக்கத்தில் மனைவி கை பட்டாலும், அவர்களையும் கும்பிடுவோம். ஆனால், வெற்றி பெற்றவுடன், அரசியல்வாதிகளுக்கு கண்ணே தெரியாது.
எனவே, மக்களாகிய நீங்கள், உங்களுக்கு யார் நல்லது செய்வர் என யோசித்து ஓட்டு போட வேண்டும். அப்போது தான், அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் வரும்.இவ்வாறு அவர் பேசினார்.