சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜன.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று(டிச.,31) கடைசி நாள் ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜன.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு பிறகு காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இதனால், ஜன.,31 வரை காத்திருக்காமல், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க வேண்டும்.நாளை (ஜன.,1) விடுமுறை நாள். இதனால் ஜன.,2 முதல் மின் இணைப்பு - ஆதார் இணைப்பு பணி நடக்கும்.

தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இனிமேல், மக்களின் வசதிக்காக, நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் - மின் இணைப்பு எண் இணைக்கப்படும்.தற்போது வரை 1.60 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர். இன்னும் 75 லட்சம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. ஆதார் - மின் இணைப்பால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது. இது தொடர்பாக வரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.