மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவுகளை கலந்தது மிகவும் கண்டனத்துக்குரியது. போலீசார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியலின மக்களை, கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது நடக்கிறது; இரட்டைக் குவளை முறையும் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில், 'திராவிட மாடல் அரசு' நடப்பதும், அதற்கு நீங்க ஒத்து ஊதும் நிலையிலும், இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்கலாமா காம்ரேட்?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
தங்கத்திற்கு தகரம் மாற்று ஆகாது. அதுபோல, 'அம்மா மினி கிளினிக்'குகளுக்கு, மக்களைத் தேடி மருத்துவம் ஈடாகாது. இத்திட்டத்தின் வழியே, இதுவரை ஒரு கோடி பேருக்கு நேரடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவதெல்லாம், 'சித்ரகுப்தன் கணக்கு' போன்றது தான்; ஏனென்றால், அது சரி பார்க்க முடியாத கணக்கு.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, 'பெயின்ட்' அடிச்சு, அம்மா மினி கிளினிக்குன்னு நீங்க அடையாளம் காட்டியதை, அவங்க வேற மாதிரி செய்யுறாங்க, அவ்வளவு தான்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: ஏற்கனவே இந்திய சட்ட ஆணையம், அ.தி.மு.க., பொதுச் செயலர் என பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதை மத்திய அரசின் அங்கீ காரமாக பார்க்கிறோம். இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதத்தால், எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. கட்சி, பழனிசாமி தலைமையில் இயங்குகிறது. கடிதம் குறித்து, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.
கூட்டத்துக்கு போய், பன்னீர்செல்வம் முன்னாடி இருக்கிற, அ.தி.மு.க.,, போர்டை துாக்கி உங்க பக்கம் வச்சிக்குங்க... போன முறையும் அப்படித்தானே செஞ்சீங்க!
தமிழக பா.ஜ., அறிவுசார் பிரிவு முன்னாள் தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: ஆதிசங்கரருக்கு பின், தாய் மெச்சும்படி ஓர் பெருமதிப்பிற்குரிய வாழ்வாக இருந்தாலும், ஒரு சாதாரண மனிதனின் இயல்பில், அந்த நாலு பேருக்கு நன்றி என்பவரில் ஒருவராக, தாயை தானும் துாக்கி சுமப்பதை வரமாக நினைத்து வாழும் பெருமகனார் பிரதமர் மோடி.
'நாட்டுக்கே ராஜாவானாலும், தாய்க்கு பிள்ளை' என்பதை பிரதமர் மோடி உணர்த்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்!
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு: உலகம் முழுதும், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் வாரிசு அரசியல் நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. பா.ஜ.,விலும் வாரிசு அரசியல் இருக்கிறது. ஜே.பி.நட்டா இதை தெரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.,வில் வாரிசு அரசியலில் இருப்பவர்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வாரிசு அரசியல் தற்போது தேவையற்ற சர்ச்சை.
நீங்களும் வாரிசு அரசியலில் வளர்ந்தவர் என்பதால், இப்படி வரிஞ்சு கட்டுறீங்க என்பது பட்டவர்த்தனமா தெரியுது!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் கிராமம், வேங்கைவயலில், இரட்டை குவளை முறை அமலில் இருந்தது, அதிர்ச்சி அளிக்கிறது. ஜாதியற்ற சமுதாயம் கண்டதாகவும், சமூக நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், மார்தட்டி, திராவிட மாடல் குறித்து பேசி புளகாங்கிதம் அடைபவர்கள், வெட்கித் தலைகுனிய வேண்டும்; மேலும், இது, ஈ.வெ.ரா., பூமி என்று பெருமை பேசுபவர்கள், வெட்கப்பட வேண்டும்.
இதை தட்டிக் கேட்க வேண்டிய திருமாவளவன் எங்க போனார் என்றே தெரியலையே!
மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலர் பொன்னுசாமி அறிக்கை: வேங்கை வயல் கிராமத்தில் நடந்த தீண்டாமை கொடுமைகளை சுட்டிக்காட்ட, 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட, ஆளும் கழகங்களில் இருந்து, ஒரு கிளைச் செயலர் கூட அந்த பகுதிகளில் இல்லாமல் இருந்திருக்க முடியாது. அப்படியானால், அந்த தீண்டாமை கொடுமைகள் அனைத்தும், இத்தனை ஆண்டு காலம் ஆட்சி புரிவோரால் கண்டும், காணாமல் சகித்தபடியோ அல்லது அதை அங்கீகரித்தோ கடந்து வரப்பட்டிருக்கிறது.
'இந்த மாதிரி கழகங்களுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்' என, உங்க தலைவர் கமலை கொள்கை முடிவு எடுக்க சொல்லுங்க!
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடி விடுவதில் ஈடுபடுகின்றனர். மாஞ்சா நுால் பயன்படுத்தி பட்டம் விட, சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடி விடுவோர், அதை விற்பனை செய்வோர் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஞ்சா, குட்கா விற்பனையை தடுத்து முடிச்சதும், மாஞ்சா நுால் பக்கம் வருவாங்களோ?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: பாற்கடல் பள்ளிகொண்ட பரந்தாமன், ஸ்ரீநாராயணன் கடவுளை போல், நடிகர் ஜோசப் விஜய் படத்தை அச்சிட்டு, ஹிந்து கடவுளை இழிவுபடுத்தியதை கண்டிக்கிறோம்; சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது, அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மாதிரி அரைவேக்காட்டு ரசிகர்களை, மன்றத்தில் இருந்து உடனே நீக்கி நடவடிக்கை எடுத்தா, ஜோசப் விஜயை பாராட்டலாம்!