பெங்களூரு:''கர்நாடகாவில், வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது; பா.ஜ., தனித்தே போட்டியிட்டு, ஆட்சியை பிடிக்கும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், 'மற்ற கட்சிகளுடன், 'அட்ஜஸ்ட்மென்ட் அரசியல்' செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா வந்தார். அன்று, மாண்டியாவில் நடந்த சங்கல்ப யாத்திரையில் பங்கேற்றார்.மத்துாரின், கெஜ்ஜலகரே என்ற மாவட்ட பால் கூட்டுறவு சங்க வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட பிரமாண்ட பால் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார்.க்ஷ
கட்சிக்கு பாதிப்பு
நேற்று இரண்டாவது நாளாக, பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்றார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த, பா.ஜ., விஜய சங்கல்ப யாத்திரையில் அவர் பேசியதாவது:நம் கட்சியில் உள்ள சிலர், வேறு கட்சிகளுடன் தொடர்பு வைத்து, அட்ஜஸ்ட்மென்ட் அரசியல் செய்கின்றனர். இதனால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அத்தொகுதியில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க, பா.ஜ., தொண்டர்களால் முடிவதில்லை. இது போன்று உள்ளூர் தலைவர்கள் செய்யக் கூடாது. மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முற்றுப்புள்ளி
தனிப்பட்ட உறவுகள் வேறு; அரசியல் உறவுகள் வேறு. இது பற்றி ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்டவர்களுக்காக கட்சியை பலி கொடுக்க முடியாது. அட்ஜஸ்ட்மென்ட் அரசியலுக்கு, இன்றே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.கடந்த தேர்தலில், அன்றைய முதல்வர் சித்தராமையா, ம.ஜ.த.,வை, பா.ஜ.,வின் 'பி டீம்' என அவதுாறு பிரசாரம் செய்ததால், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை.
பழைய மைசூரு பகுதியில், பா.ஜ.,வுக்கு கடுமையான எதிரி ம.ஜ.த., என்பதை மறக்காதீர்கள். நம் கட்சியை பலப்படுத்தினால், சொந்த பலத்தில், கர்நாடகாவில் கட்சியை ஆட்சியில் அமர்த்த
முடியும்.பா.ஜ.,வின் 'பி டீம்' ம.ஜ.த., என கூறுகின்றனர். வரும் தேர்தலில் அக்கட்சியுடன் பா.ஜ., மறைமுக கூட்டணி வைத்துக் கொள்ளும் எனவும் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது.
நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம்; கர்நாடக சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்.தென் மாநிலங்களில், பா.ஜ.,வை பலப்படுத்த வேண்டும். இதன் ஒரு கட்டமாக, நுழைவாயிலான கர்நாடகாவில் மீண்டும் தனித்தே பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும். பெங்களூரில் மட்டும், 20 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும்.
துமகூரு, ராம்நகர், ஹாசன், பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில், கட்சியை பலப்படுத்தினால், பா.ஜ., 120 முதல் 125 இடங்களில் வெற்றி பெறுவது கஷ்டமல்ல. சிலரை விமர்சித்தால், குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டுகள் கை நழுவும் என்ற பயம், நம் கட்சியினரை வாட்டுகிறது; இது நீடிக்கக் கூடாது.
ஹாசனில் பிரீத்தம் கவுடா, ஒரு பிரபல சமுதாயத்தை எதிர்த்து, தேர்தலில் வென்றார். அதனால் சிலர், அந்த குடும்பத்தினருக்கு எதிராக பேச தயங்குகின்றனர். ஜாதியை ஓரம் கட்டி, தைரியத்துடன் தேர்தலுக்கு தயாராகுங்கள்.
பழைய மைசூரு பகுதியில், எந்த காரணத்துக்காகவும், ஒப்பந்த அரசியல் செய்யக்கூடாது.
கட்சியை ஒரு மாதத்துக்குள் சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும்.நம் திட்டங்கள்
சரியான வழியில், செயல்படுத்தப்பட வேண்டும். அடுத்த முறை, நான் வருவதற்குள்
அனைத்தும் சரியாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.