வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெஞ்சில் சங்கமித்த பெரியவர்கள், புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
''ஜாதி அடிப்படையில, ஓட்டுகளை திரட்ட வியூகம் வகுக்கிறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அன்வர்பாய்.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
![]()
|
''பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., தென் மாவட்டங்கள்ல, 'வீக்'கா இருக்குன்னு ஒரு பேச்சு இருக்குல்ல... இதனால, 'தென் மாவட்டங்கள்ல, ஜாதி ரீதியா முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களது பிறந்த நாளை, கட்சி சார்புல கொண்டாடி, அந்தந்த சமூக மக்கள் ஓட்டுகளை, லோக்சபா தேர்தல்ல அள்ளிடலாம்'னு விருதுநகரைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைக்கு ஐடியா குடுத்திருக்காரு பா...
''வர்ற, 3ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் வருது... கட்டபொம்மன், ராஜகம்பளத்தார் சமுதாய நலச்சங்க நிர்வாகிகளோட பழனிசாமியை பார்த்து, 'மதுரையில இருக்கிற கட்டபொம்மன் சிலைக்கு, 3ம் தேதி மாலை அணிவிச்சு, மரியாதை செய்யணும்'னு கேட்டிருக்காரு பா...
''அன்னைக்கு தனக்கு சேலத்துல வேற நிகழ்ச்சிகள் இருக்கிறதால, வீட்டுலயே கட்டபொம்மன் படத்துக்கு அஞ்சலி செலுத்துறேன்னு பழனிசாமி சொல்லிட்டாரு... அதே நேரம், 'கட்சியின் மற்ற முன்னணி நிர்வாகிகளை, மதுரைக்கு அனுப்பி வைக்கிறேன்'னு ராஜேந்திர பாலாஜிக்கு வாக்குறுதி தந்திருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
'இந்த வருஷமாவது, கொரோனா பீதியில்லாம, மக்கள் சந்தோஷமா இருக்கட்டும்...'' என்ற அண்ணாச்சி, ''இடமாறுதலை ரத்து செய்ய, 'பெட்டி'யோட சுத்திக்கிட்டு இருக்காரு வே...'' என, மேட்டருக்கு வந்தார்.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில, முக்கிய அதிகாரியா இருந்தவர், துவாக்குடி நகராட்சிக்கும் பொறுப்பா இருந்தாரு... சமீபத்துல, ஒரு நிகழ்ச்சி கல்வெட்டுல, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பெயரை போடாம விட்ட விவகாரத்துல, அதிகாரியை நாகப்பட்டினத்துக்கு துாக்கி அடிச்சுட்டாவ வே...
''அதிகாரி ரொம்ப வருஷமா மணப்பாறை, துவாக்குடியிலயே, 'வளமா' வாழ்ந்துட்டு இருந்தாரு... இப்ப, தன் இடமாறுதலை ரத்து பண்ணும்படி, அமைச்சர் நேரு தரப்புக்கு வேண்டியவங்களை, பெட்டியோட வலம் வந்துக்கிட்டு இருக்காரு... ஆனா, 'இவர் மேல நேரு பயங்கர கோவத்துல இருக்கிறதால, வாய்ப்பு ரொம்ப கம்மி'ன்னு, நகராட்சி ஊழியர்கள் பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''விஜய்கார்த்திக் எங்க கிளம்பிட்டேள்... இன்னொரு நகராட்சி, 'மேட்டர்' இருக்கு... அதையும் கேட்டுட்டு போங்கோ...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்புல, ராமநாதபுரம் நகராட்சியில, சாலையோர வியாபாரிகளுக்கு காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்ய தள்ளுவண்டிகள் தரா... அடையாள அட்டை இருக்கிற வியாபாரிகளுக்கு தான் வண்டி தரணும் ஓய்...
''ஆனா, தி.மு.க., கவுன்சிலர்கள், 'நாங்க சொல்றவாளுக்கு தான் தள்ளுவண்டிகள் தரணும்'னு அதிகாரிகளை மிரட்டறா... அவாளும் வேற வழியில்லாம குடுத்துடறா ஓய்...
''இதை கேள்விப்பட்ட மற்ற கட்சி கவுன்சிலர்கள், 'எங்க வார்டு வியாபாரிகளுக்கு வண்டி தரலைன்னா போராட்டம் பண்ணுவோம்'னு கொடி பிடிச்சிருக்கா... அதிகாரிகளோ, 'அடுத்த வண்டிகள் வர்றச்சே, கண்டிப்பா தரோம்'னு சமாதானம் செஞ்சிருக்கா... நகராட்சிக்கு கமிஷனர் இல்லாததால, ஆளாளுக்கு நாட்டாமை பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
'புத்தாண்டு பரிசா கலெக்டர்கள் மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க...'' என, இஞ்சி டீயை உறிஞ்சியபடியே பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''மேல சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பல மாவட்ட கலெக்டர்கள் மீது, அரசுக்கு நிறைய புகார்கள் வந்திருக்குது... இது போக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், கலெக்டராக விருப்பம் தெரிவிச்சிருக்காங்க...
''அதுவும் இல்லாம, சில அமைச்சர்கள், தங்களது துறைகள்ல, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாத்துங்கன்னு முதல்வரிடம் வேண்டு கோள் விடுத்திருக்காங்க... எல்லாத்தையும் கூட்டி கழிச்சு, கலெக்டர்கள் இடமாறுதல் பட்டியல் தயாராயிட்டு இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பசையுள்ள பதவிக்கு போட்டி அதிகமா இருக்குமே பா...'' என்ற அன்வர்பாயே, ''தலைமை ஆசிரியை மேல ஏகப்பட்ட புகார்கள் குவியுது பா...'' என்றார்.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டம், திருப்பந்தியூர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, சக ஆசிரியர்களை மதிக்கிறதே இல்லை... எல்லாரையும் தரக்குறைவா, ஆபாசமா திட்டுறதோட, சண்டை கோழியாவும் இருக்காங்க பா...
''இவங்க வீட்டுக்காரர், இன்னொரு பள்ளியில தலைமை ஆசிரியரா இருக்கார்... சீக்கிரமே அவர் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுல போக இருக்காரு பா... இதனால, தன்னை யாரும் எதுவும் பண்ண முடியாதுன்னு அந்தம்மா ஆட்டம் போடுறாங்க... அவங்களை, மாவட்ட கல்வி அலுவலர் கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணியும் கேட்கலை பா... சக ஆசிரியர்கள் மனசு நொந்து இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
அங்கு வந்த ஒரு வாலிபர், 'பாரதி தெரு எங்க இருக்கு...' என விசாரிக்க, வழி கூறிவிட்டு திரும்பிய குப்பண்ணா, ''தொகுப்பாளினிகள் நியமன சர்ச்சையை கேளுங்கோ...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.
''ஏதாவது, 'டிவி' விவகாரமா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''இல்லை... முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்கள், தமிழகத்துல ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்கள்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கற வாய்ப்பை, பெரும்பாலும் பெண்களுக்கே தரா...
''தமிழ், இங்கிலீஷ்ல நன்னா பேசக் கூடிய பெண் தொகுப்பாளினி கள் நிறைய பேர் இருந்தாலும், குறிப்பிட்ட சிலருக்கே, செய்தித் துறையின் முக்கிய அதிகாரி திரும்ப திரும்ப வாய்ப்பு தரார் ஓய்...
![]()
|
''அதாவது, 'சோஷியல் மீடியா'வுல அவரோட அடிக்கடி, 'சாட்' செய்யறவா, அவர் ஹோட்டலுக்கு சாப்பிட அழைச்சா, தட்டாம வரவாளுக்கு மட்டுமே, 'சான்ஸ்' தரார்... வசதி குறைவான, திறமையான தொகுப்பாளினிகள், சான்ஸ் கிடைக்காம தவிக்கறா ஓய்...
''சில துறைகளின் விழாக்கள்ல, தொகுப்பாளினிகளை மாத்தச் சொன்னதுல, சில ஐ.ஏ.எஸ்., அதிகாரி களுக்கும், செய்தி துறை அதிகாரிக்கும் வாக்குவாதமே நடந்திருக்கு...
''அதிகாரிக்கு கலெக்டர் பதவி குடுத்து, மாவட்டத்துக்கு தள்ளிவிட அரசு தயாரா இருந்தும், 'கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கியமான மாவட்டமா தந்தா தான் போவேன்'னு அடம் பிடிக்கறார்... முதல்வருக்கு நெருக்கமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆதரவு, இவருக்கு அதிகமாவே இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஜெயசீலன் அண்ணாச்சி கடை வரை போவணும்... ஜோலியிருக்கு...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.