வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உ.பி.,யில் செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி:
உத்தர பிரதேச மாநில, பா.ஜ., அரசு தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தாமதம் செய்கிறது; உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.

டவுட் தனபாலு: 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக போறானாம்'னு கிராமங்கள்ல சொல்லுவாங்க... அந்த மாதிரி, லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்னு அடுத்தடுத்து படுதோல்விகளை சந்திச்சிட்டு வர்றீங்க... அடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்திட்டா மட்டும், அமோகமா ஜெயிச்சிடுவீங்களா என்ற, 'டவுட்' எழுதே!
பத்திரிகை செய்தி:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, 81 கோடி ரூபாய் செலவில், கடலில் பேனாசிலை அமைக்க உள்ள தமிழக அரசின் திட்டம் குறித்து, ஜன., 31ம் தேதி சென்னையில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

டவுட் தனபாலு: காலியான அரசு கஜானாவை நிரப்ப, பால் விலை, மின் கட்டணம், சொத்து வரின்னு எல்லாத்தையும் ஏத்துறீங்க... இதுக்கு இடையே கடலில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க, 81 கோடி ரூபாயை செலவழிக்க போறீங்க... இது வேணாம்னு யாரும் சொன்னா கேட்கவா போறீங்க... அதனால, நீங்க நடத்துற கூட்டம் கண்துடைப்புக்கு தான் என்பதில் கடுகளவும், 'டவுட்'டே இல்லை!
வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:
பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில், எதிர்க் கட்சிகளுக்கு பயப்படும் நிலையில் இந்த அரசு இல்லை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று தான், கரும்பு கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பிரச்னையை எழுப்பத் தான் செய்வர். அதற்கெல்லாம் பயந்தால், ஆட்சியை நடத்த முடியாது. எதிர்க்கட்சிகளுக்கு பயப்படும் முதல்வர், ஸ்டாலின் அல்ல.
டவுட் தனபாலு: தி.மு.க., ஆளுங்கட்சி வரிசையில அமர்ந்திருந்த ஆண்டுகளை விட, எதிர்க்கட்சி வரிசையில இருந்த வருஷங்கள் தான் அதிகம்... இப்ப, ஆளுங்கட்சியாகி விட்டோம் என்ற மமதையில இப்படி பேசலாமா... நீங்க பாரம்பரிய, தி.மு.க., காரரா இருந்தா இப்படி பேசியிருக்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு:
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று விட்டார். இனி வரும் காலங்களிலும், அவர் சிறப்பாக செயல்படுவார்; முதல்வர் ஸ்டாலினின் எண்ணங்களை உதயநிதி நிறைவேற்றுவார்.
டவுட் தனபாலு: பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வு கூட, மூணு மாத இடைவெளியில் தான் நடக்கும்... ஆனா, உதயநிதி அமைச்சராகி முழுசா மூணு வாரம் கூட முடியல... அதுக்குள்ள அவர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று விட்டார்னு, 'டவுட்' இல்லாம, 'சர்டிபிகேட்' கொடுக்குறீங்களே... உங்க விசுவாசத்தை நினைச்சா, புல்லரிக்குது!
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பேரணியில் பங்கேற்ற, அவரது கட்சியினர் எட்டு பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். தன் அரசியல் நலனுக்காக, தொண்டர்களை பலி கொடுத்துள்ளார் நாயுடு; இதற்காக, அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
டவுட் தனபாலு: அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுட்டா மட்டும், போன எட்டு உயிர்களும் திரும்ப வந்துடுமா... அரசியல் தலைவர்கள், தங்களது சுயநலத்துக்காக நடத்தும் பேரணிகளை தடை செய்ய, ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒழிய, இதுபோன்ற சோகங்களை தடுக்க முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி:
தேசிய சட்ட ஆணையம், 'அ.தி.மு.க., பொதுச் செயலர்' என குறிப்பிட்டு, பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், 'ரிமோட்' மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த ஆலோசனை கூட்ட அழைப்பில், 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' என குறிப்பிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கடிதம் அனுப்பி உள்ளார்.
டவுட் தனபாலு: தேசிய சட்ட ஆணைய கடிதத்தால் பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் சந்தோஷமா இருந்தாங்க... அதுக்குள்ள, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்னு' குறிப்பிட்டு கடிதம் அனுப்புகிறார் என்றால், இதன் பின்னணியில், தி.மு.க., அரசு இருப்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!