வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழ் மொழி மீது அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ள கவர்னர் ரவி, தமிழை முழுமையாக கற்று வருகிறார். அதற்கென நியமிக்கப்பட்டுள்ள தமிழாசிரியர் உதவியுடன், தமிழில் சரளமாக பேசவும், தமிழை பிழையின்றி வாசிக்கவும், தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். புது முயற்சியாக, புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில், தமிழில் உரையாற்ற கவர்னர் ரவி திட்டமிட்டுள்ளார்.
![]()
|
தமிழக கவர்னர் ரவி, பீஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, கேரளாவில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
கலாசாரம் மீது பற்று
பின், மத்திய அரசு பணிக்கு மாற்றலாகிச் சென்று, பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்; மத்திய உளவுத் துறையிலும் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த 2012ல் அரசு பணியில் ஓய்வு பெற்ற பின், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். 2019 ஆக., 1ல் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார். 2021 செப்டம்பர் 18 முதல், தமிழக கவர்னராக பணியாற்றி வருகிறார்.
நாட்டின் பண்பாடு, கலாசாரம் மீது மிகுந்த பற்று கொண்டவர்; தேச பக்தி மிகுந்தவர்; மிகவும் எளிமையானவர். தமிழகம் வந்த பின், தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது, அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள, தி.மு.க.,வின் கொள்கை களுக்கு முற்றிலும் எதிரான கொள்கையை கொண்டவராக இருப்பதால், அரசுக்கும் அவருக்கும் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது.
'தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்' என, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது.
ஆனால், கவர்னர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.
'திராவிட இனம்' எனக் கூறி, தி.மு.க., அரசியல் நடத்தி வரும் நிலையில், 'திராவிடம் என்பது இனம் கிடையாது. அது ஒரு நிலப்பரப்பு' என பேசி, தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இதனால் எரிச்சல் அடைந்த தி.மு.க., அரசு, பல்கலைகளில் கவர்னரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது; ஆனால், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போட்டு விட்டார்.
அதைத் தொடர்ந்து, கவர்னரை மாற்ற வலியுறுத்தி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட மனு, ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்டது.
இது குறித்து கவலைப்படாத கவர்னர், தொடர்ந்து தன் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
எந்த கவர்னரும் செய்யாத வகையில், கவர்னர் மாளிகையில், மாணவர்கள், தொழில் முனைவோர் போன்றோருடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அத்துடன் தமிழக மக்களுடன் தமிழில் உரையாட விரும்புகிறார். அதற்காக தமிழாசிரியர் ஒருவரை நியமித்து, தீவிரமாக தமிழ் கற்று வருகிறார்.
பாராட்டு
சமீபத்தில் காசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு விழாவில், கவர்னர் சில நிமிடங்கள் தமிழில் உரையாற்றினார்.
அவரது தமிழ் பேச்சு, பெரும் வரவேற்பை பெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், புத்தாண்டின் முதல் கூட்டமாக, தமிழக சட்டசபை, வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு கூடுகிறது. அதில் கவர்னர் உரையாற்ற உள்ளார்.
வழக்கமாக கவர்னர்கள், ஆங்கிலத்தில் உரையாற்றுவர்; அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பது வழக்கம்.
முழு நேர பயிற்சி
இந்த முறை முழுமையாக தமிழில் பேச, கவர்னர் ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தமிழில் பேசவும், எழுதவும், வாசிக்கவும் முழு நேர பயிற்சி எடுத்து வருகிறார். கவர்னர் மாளிகையில் பணியாற்றுவோருடன் தமிழில் பேசி, களப் பயிற்சியும் எடுத்து வருகிறார்.
![]()
|
விரைவில் அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், தமிழில் பேசுவார் என, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தினத்தன்று மாலை, கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடக்கும். முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் பங்கேற்பர். இம்முறை விளையாட்டுத் துறையில் விருதுகள் பெற்ற விளையாட்டு வீரர்கள், தமிழ் அறிஞர்கள், தொழில் துறையில் சாதனை படைத்தவர்கள், சமூக சேவகர்கள் என, தமிழகம் முழுதும் முக்கியமான நபர்களுக்கு, கவர்னர் அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.
- நமது நிருபர் -