புதுடில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இரு நாடுகளை சேர்ந்த கைதிகள் மற்றும் மீனவர்கள் குறித்த பட்டியலை இரு நாடுகளும் பரிமாறி கொண்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தூதரகம் வாயிலாக, தங்கள் நாட்டு சிறையில் உள்ள சிவிலியன் கைதிகள் மற்றும் மீனவர்கள் குறித்த பட்டியலை இந்தியாவும், பாகிஸ்தானும் பரிமாறி கொண்டுள்ளன. 2008 ம் ஆண்டு ஒப்பந்தப்படி, தூதரக உதவி அளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜன.,1 மற்றும் ஜூலை 1 அன்று மேற்கண்ட தகவல் பரிமாறி கொள்ளப்படும்.
இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த சிவிலியன் கைதிகள் 339 பேர் மற்றும் 95 மீனவர்கள் குறித்த பட்டியல் அந்நாட்டிடம் வழங்கப்பட்டுள்ளது. அது போல் இந்தியாவை சேர்ந்த 51 சிவிலியன் கைதிகள் மற்றும் 654 மீனவர்கள் குறித்த பட்டியலை பாகிஸ்தான் வழங்கி உள்ளது.
பாகிஸ்தான் சிறையில் தண்டனை முடிந்து இருக்கும் 631 மீனவர்கள் மற்றும் 2 சிவிலியன் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அந்நாட்டிடம் கூறியுள்ளோம். இந்திய சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் கைதிகளுக்கு தூதரக உதவி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நம்மிடம் பாக்., கூறியுள்ளது.
இந்திய கைதிகள், மீனவர்கள் மற்றும் இந்தியர்கள் என கருதப்படுபவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், தண்டனை காலம் முடிந்தவர்களை உடனடியாக விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.