சேலம்: ஆங்கில புத்தாண்டால், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சுவாமி, ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
டவுன் ராஜகணபதி கோவிலில் மூலவர் கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புது வாகனம் வாங்கியவர்கள் பூஜை செய்தனர்.
கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; எல்லைப்பிடாரியம்மனுக்கு தங்கம், வெள்ளி கவசம்; நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
அதேபோல் வெண்ணங்குடி முனியப்பன், அஸ்தம்பட்டி மாரியம்மன் உள்பட, மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாவட்டத்தில், ஆத்துார் வெள்ளை விநாயகர் தங்க கவசம்; வடசென்னிமலை பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர்; வெள்ளார்நாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரர், மூக்கரை நரசிம்ம பெருமாள்; கவுண்டம்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பூஜை நடந்தது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், பூக்களால் அலங்கரித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள், வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட, 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
பலவித மலர்கள், கனி வகைகளால் கோவில் முழுதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.