சிலர் எதற்கெடுத்தாலும் 'லொடலொட'வெனப் பேசிக்கொண்டே இருப்பர். ஒரு விஷயத்தை சுருக்கமாகக் கூறாமல் நீட்டி முழக்குவதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பர். இதனால் சில நிமிடங்களில் சொல்லி முடிக்கவேண்டிய விஷயத்தைக்கூட இவர்கள் பல மணிநேரம் பேசி எதிராளிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவர். இவர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டு விட்டோமே என எதிர்நபர் வருந்தும் அளவுக்கு இவர்கள் தங்கள் வார்த்தை ஜாலத்தைக் காட்டுவர்.
![]()
|
லொட லொடவென ஒரு விஷயத்தை நீட்டி முழக்கும் பழக்கம் கொண்டவர்கள் குழந்தைப் பருவம் முதலே அவ்வாறு இருந்திருப்பர் எனக் கூற முடியாது. வாழ்வில் ஏதாவதொரு கட்டத்தில் அதீத மன உளைச்சலுக்கு உள்ளான இவர்கள், அதன் பாதிப்பு காரணமாக இவ்வாறு மாறியிருக்க வாய்ப்புள்ளது. 50 வயதுவரை வாழ்வில் முதல் பாதியில் அமைதியாக இருந்த பலர், பிற்பாதியில் லொட லொட ஆசாமிகளாக மாறியிருப்பர். அமைதியாக இருந்து பல இன்னல்களைச் சந்தித்தவர்கள் பேச்சின் மூலம் வாக்குவாதத்தை வெல்லும்போது அவர்களுக்கு அது புதிய அனுபவமாக இருக்கும். இதனால் இவர்கள் நாள்பட வாக்குவாதப் பிரியர்களாகி விடுவர்.
![]()
|
வேகமாகப் பேசும்போது இவர்களது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்துடிப்பு அதிகரிப்பதால் படபடப்பு ஏற்படும். இதனால் இவர்கள் உடலளவிலும் பாதிக்கப்படுவர். சமூகத்தில் இருந்து பிறர் தன்னை தனிமைப் படுத்துவதாக நினைக்கும் நடுத்தர வயதினர் மற்றும் முதியோர் இவ்வாறு லொட லொட பேச்சுப் பிரியர்களாகிவிடுவர். இருநிலை மனமாற்றம், ஸ்கீசோஃபெர்னியா, ஏடிஹெச்டி உள்ளிட்ட மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அளவுக்கதிகமாகப் பேசுவது வழக்கம்.
லொட லொட ஆசாமிகள் இருவகைப்படுவர். அதீத பதற்றம் காரணமாக வார்த்தை உச்சரிப்பில் தெளிவுடன் அதிவேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஓடுவதுபோல 'சட..சட...'வெனப் பேசுவோர் ஒரு ரகம். வார்த்தை உச்சரிப்பில் தெளிவின்றி உளறுவதுபோல வேகமாகப் பேசுவோர் மற்றொரு ரகம். இதற்குப் பெயர் ஆங்சைட்டி டிஸார்டர். இவர்களின் இந்த அதிவேகப் பேச்சுக்கிடையே எதிராளியால் குறுக்கிட்டு தனது கருத்தை சொல்லவே முடியாது. அவர்கள் பேசுவதை கேட்கவேண்டியதுதான் ஒரே வழி.
![]()
|
இவர்களை குணப்படுத்த உரிய மனநல கவுன்ஸிலிங் தேவை. மேலும் பிறர் இவர்களுடன் இணக்கமாகப் பழகினால் இவர்களின் இந்தப் பிரச்னை நீங்கும். முடிந்தவரை இவர்கள் தனிமையத் தவிர்த்து வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் இவர்களது மன அழுத்தம் குறையும். இதனால் இவர்களின் பேச்சு சராசரி நிலையை எட்டும்.