பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழக அரசு, ஜனவரி, பிப்ரவரி,
மார்ச் மாதங்களில், 51 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு
செய்திருப்பது, பொருளாதார நிலை குறித்தகவலையை அதிகரிக்க செய்கிறது. 2022- -
23-ல், தமிழக அரசின் நேரடி கடன், 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
இதற்கு வட்டியாக நடப்பாண்டில், 48 ஆயிரத்து, 121 கோடி ரூபாய் செலவிடப்பட
உள்ளது. இது, தமிழகத்தின் சொந்த வரி வருவாயான, 1.42 லட்சம் கோடி ரூபாயில்
மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். ஆக்கப்பூர்வமான வழிகளில் தமிழகத்தின்
வருவாயை அதிகரிக்கவும், கடன் சுமையை கணிசமாக குறைக்கவும், தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதாரத்தை புட்டு புட்டு வைக்கிற ஒருவர், அன்புமணி அருகிலேயே இருப்பது அப்பட்டமாக தெரிகிறது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: மதுரை உலக தமிழ் சங்க நுாலகத்திற்கு, நுால்கள் வாங்க, முந்தைய ஆட்சியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. நிதியை விடுவிக்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியும், தி.மு.க., அரசு இதுவரை விடுவிக்காதது, அ.தி.மு.க., ஆட்சியில் போட்ட அரசாணை என்பதாலா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுல இவருக்கு என்ன சந்தேகம்... கண்டிப்பாக, போன ஆட்சியில போட்ட அரசாணையே தான் காரணம்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில், மலம் கலந்த தீய சக்திகளை, இதுவரை கைது செய்யாதது வெட்கக் கேடானது.
கைது செய்ய முடியவில்லை என்றால், அது தமிழக அரசின் இயலாமையை, நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது. கைது செய்ய மனம் இல்லையெனில், அது, தி.மு.க.,வின், தமிழக அரசியலின், ஜாதி வெறியின் கோர முகத்தை உணர்த்துகிறது.
தி.மு.க., அரசு எது செஞ்சாலும், செய்யாம விட்டாலும், அதுல குற்றம் கண்டுபிடிப்பது என்ற முடிவுல இருப்பீங்க போலிருக்குது!
தமிழக சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: அம்பேத்கரை பட்டியலின மக்களுக்கான தலைவர் என்ற குறுகிய கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்று மாறும் என, தெரியவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமல்ல... இந்தியாவில் நிலவும் ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதற்கு எதிரான சிந்தனை கொண்டிருந்தவர்; அதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டவர்.
சட்ட மேதை அம்பேத்கரை, ஒரு இனத்திற்கான தலைவராக பார்க்க துவங்கியதே, உங்களை போன்ற அரசியல்வாதிகள் தானே!