தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேச்சு:
மத்திய பா.ஜ., அரசு, இனம், மொழி, பாகுபாடுடன் மக்களை பிரித்து வைக்கிறது. இச்சூழலில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி, காங்., முன்னாள் தலைவர் ராகுல், 110 நாட்களை தாண்டி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராகுலால் மட்டுமே நாட்டின் ஒற்றுமையை காப்பாற்றி, ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும்.

ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தங்கபாலு விளக்குவாரா?
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் பேட்டி:
பிரதமர் மோடி, வரும் லோக்சபா தேர்தலில், இரண்டு இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், அதில் ஒரு தொகுதி தமிழகத்தின், ராமநாதபுரம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவரை, தி.மு.க., கூட்டணி தோற்கடிக்கும். தர்மபுரி தொகுதியில், பிரதமர் மோடி போட்டியிட்டால், தோல்வி அடைவார். பிரதமர் வேட்பாளரை தோல்வி அடையச் செய்த தொகுதி என, தர்மபுரி தொகுதிக்கு, தி.மு.க., கூட்டணி பெயர் பெற்று தரும்.
ஒருவேளை பிரதமர் உங்க தொகுதியில போட்டியிட்டு, அவரிடம் நீங்க தோத்துட்டாலும், தேசிய அளவுல பிரபலமாகிடுவீங்களே... உங்க விளம்பர மோகம் நன்கு புரியுது!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறை ஒரு பக்கம் என்றால், அத்துமீறுவது, பாலியல் தொல்லை தருவது, அவமதிப்பது போன்றவை, பணியிடங்களிலும், பொது இடங்களிலும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. ஜெயலலிதா ஆட்சியில், பெண்கள் மிகவும் பாதுகாப்புடன், தைரியமாக இருந்தனர். இன்று மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய, பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில தான், வாச்சாத்தி பழங்குடியின பெண்கள் பலாத்காரம், சிதம்பரம் பத்மினி பலாத்கார சம்பவங்கள் நடந்தன என்பதை யாரும் இன்னும் மறக்கலை!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன், 'கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க கூடாது என நீதிபதி சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது. அரசு இயற்றும் சட்டங்களில் நீதிபதிகள் தலையிடுகின்றனர்' என, இழிவாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியது கண்டிக்கத்தக்கது.

'திராவிட மாடல்' அரசு எந்த சட்டம் இயற்றினாலும், நீதித்துறையும் தங்களை போல ஆமாம் சாமி போடணும்னு, மா.கம்யூ., கட்சியினர் எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு!
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி:
பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவர். ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்கும் அவர், பொறுப்புடன் பேச வேண்டும்; நாலாந்தர பேச்சாளராக பேசுவது, தலைவருக்கு அழகு இல்லை.\
இதற்கு முன் இருந்த, பா.ஜ., மாநில தலைவர்களை போல, இவரும் இருக்கும் இடம் தெரியாம இருந்தா நல்லது, அப்படித்தானே!