வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயமுறுத்துவது பாஜகவின் கொள்கை என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.

கடந்த செப்.,7ம் தேதி, விலைவாசி உயர்வை கண்டித்து, காங்., எம்.பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்தது.
தற்போது, உ.பி மாநிலத்தில் காங்., எம்.பி ராகுல் ஷாம்லி மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, ராகுல் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ராணுவத்தில் முன்பு இளைஞர்கள் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவார்கள்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடிய போது, போராட்டத்தில் கலந்து கொண்ட மாதிரியான புகைப்படத்தை எடுத்தால் உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்று பா.ஜ., கூறியது. இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயமுறுத்துவது பாஜகவின் கொள்கை.

நான் யாத்திரையின் போது டி-சர்ட் அணிந்து செல்கிறேன். பல ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்து செல்கின்றனர். ஆனால் குளிர்காலத்தில், அவர்கள் ஏன் ஸ்வெட்டர் அணிந்து செல்லவில்லை என ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை.
எனது டி-சர்டில் உள்ள கேள்விகள் முக்கியமான பிரச்சினை அல்ல.
ஆனால் இந்தியாவின் குழந்தைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், குளிர்காலத்திற்கு ஏதுவான ஆடை இல்லாமல் நடப்பது உண்மையான பிரச்சினை ஆகும்.
மக்களிடம் பணவீக்கம் குறித்து கூறுவதை விட்டுவிட்டு, 4 சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சிறுத்தைகள் காட்டில் சுற்றித் திரிவதாகவும் ஊடகங்கள் செய்தியில் கூறுகின்றது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.