ம.தி.மு.க., தலைமை கழக செயலர் துரை பேட்டி: லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தொடர்வோம். ம.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பினால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அனுமதி தந்தால், தேர்தலில் போட்டியிடுவேன்.
* ம.தி.மு.க.,வை தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டது, அப்பட்டமாக தெரிகிறது!
***
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர், பி.ஆர்.பாண்டியன் பேச்சு: சட்டசபை தேர்தலின் போது, 'தமிழக விவசாயிகள் நலன் காக்கப்படும்' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது; ஆனால், வெற்றி பெற்ற பின், விவசாயிகளை அழிக்கும் பணியில், தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது. மேட்டூர் அணை கட்டிய பின், தமிழகத்தில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை. இப்பிரச்னையில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அரசுகள், மாறி மாறி குற்றம் சாட்டுகின்றன.
அவங்க, தண்ணீருக்கு அணை கட்டுறாங்களோ, இல்லையோ... தமிழகத்துல தங்களை தவிர வேற யாரும் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்துடக் கூடாதுன்னு, மற்ற கட்சிகளுக்கு நல்லாவே, 'அணை கட்டி' வச்சிருக்காங்க!
மக்கள் நீதி மய்யம் அறிக்கை: சென்னை போரூரைச் சேர்ந்த இன்ஜினியர் ஷோபனா, தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்ற போது, மணல் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தகவல், மிகுந்த வேதனையை அளிக்கிறது. மாநிலம் முழுதும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் நேரிடும் விபத்துகளால், ஏராளமானோர் பலத்த காயமடைகின்றனர்; சிலர் உயிரிழக்கவும் நேரிடு கிறது. இனியாவது, சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க, போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர், அமைச்சர்கள் அடிக்கடி பயணிக்கும், சாலை பணிகளில் தான் போர்க்கால வேகம் இருக்கும்!
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை: 'நீட்' தேர்வுக்கு எதிரான வழக்கு, கடந்த ஆண்டு அக்., 14ல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அன்று வழக்கை நடத்தாமல், அரசு வாய்தா கோரியது. இந்த வழக்கு, சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, ஆறு மாதம் தள்ளி வைக்கும்படி, தி.மு.க., சார்பில் கோரப்பட்டது. கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கடும் கண்டனம் தெரிவித்து, அரசின் தலையில் குட்டியுள்ளது.
இப்படியே ஆறு மாசம், ஆறு மாசம் என, அஞ்சு வருஷத்தையும் ஓட்டிடலாம்னு, தி.மு.க., அரசு கணக்கு போட்டுள்ளதோ?
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட, ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்களின் விலையும், இன்றைக்கு பெருமளவு உயர்ந்துள்ளது. பெரும்பாலான இந்தியர்களின் வருவாய் அதிகரிக்கவில்லை; ஆனால், வேலையின்மை அதிகரித்து, சாதனை படைத்து கொண்டிருக்கிறது.
மாநிலத்தில் கூட்டணி கட்சிக்கு, 'ஜால்ரா' தட்ட வேண்டியிருப்பதால், மத்திய அரசை கண்டித்தே அறிக்கை விட வேண்டிய இவரது தர்மசங்கடம் நல்லாவே புரியுது!