வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட, காங்., முன்னாள் தலைவர் ராகுல் திட்டமிட்டு உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வரும், 2024 லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க, இன்னும், 14 மாதங்கள் உள்ள நிலையில், கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளை, முக்கிய அரசியல் கட்சிகள் துவங்கி விட்டன.
கடந்த, 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. இதனால், எப்படியாவது, 2024-ல் பா.ஜ., ஆட்சி அமையாமல் தடுத்துவிட வேண்டும் என்ற இலக்குடன், காங்., தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல், கடந்த செப்., 7 முதல், 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்., ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ராகுலின் யாத்திரை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
யாத்திரையின் போது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் அரசியல் சூழல்; லோக்சபா தேர்தலுக்கான திட்டமிடல்கள் குறித்து, யாத்திரை பொறுப்பாளர், தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் உள்ளிட்டோருடன், ராகுல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டார். அமேதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில், ராகுலை பிரதமர் வேட்பாளராக, அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் அறிவிக்க உள்ளது. உடல்நிலை காரணமாக, வரும் தேர்தலில் சோனியா போட்டியிட மாட்டார் என, கூறப்படுகிறது.
![]()
|
எனவே, 2024-ல், பாட்டி இந்திராவும், தாய் சோனியாவும் பலமுறை வென்ற உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுலும்; அமேதி தொகுதியில் பிரியங்காவும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த, 2014, 2019 தேர்தல்களின் போதே, கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட வேண்டும் என, தமிழக காங்., நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால், அவர் இரண்டாவது தொகுதியாக, கேரளாவின் வயநாட்டை தேர்வு செய்தார். வரும் தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட ராகுல் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனால் தான், தமிழகம், தமிழக மக்கள், தமிழ் மொழியை பாராட்டி, ஓராண்டாக அதிகம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 'நானும் தமிழன் தான்' என்று பேசும் அளவுக்கு, அவர் சென்றுள்ளார்.
சமீபத்தில் கமலுடன் உரையாடிய ராகுல், 'தமிழ் மக்கள் என் மீது செலுத்தும் அன்பு, வேறு எந்த மாநிலத்திலும் எனக்கு கிடைத்ததில்லை' என்றார்.
தமிழகத்தில் போட்டியிடுவது, தென் மாநிலங்களில் அதிக இடங்களில் வெல்ல உதவும் என, ராகுல் நினைப்பதாகவும், அதற்கான முன் தயாரிப்பாகவே, தமிழகம், தமிழ் மொழி பற்றிய ராகுலின் பேச்சு என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு பதில் அளித்த, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்' என்றார். காங்., - பா.ஜ., ஆகிய இரு தேசிய கட்சிகளும், தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து, தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.
- நமது நிருபர் -