புதுடில்லி: டில்லி சிறைகளில் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் 115 மொபைல் போன்கள் சிக்கின. தடுக்க தவறிய சிறை அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டில்லி திகார் ஜெயில் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆம்ஆத்மி அமைச்சர் ஒருவருக்கு கைதி அவருக்கு மசாஜ் செய்யும் வீடியே வெளியானது. தொடர்ந்து பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் தகுந்த பாதுகாப்பும், வசதியும் செய்து தர ஆம்ஆத்மியை சேர்ந்த சத்யேந்திரஜெயின் என்பவர் பல கோடி பெற்றதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் டில்லியில் திகார், ரோகிணி, மண்டோலி சிறைகளில் கடந்த 15 நாட்களாக விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனையில் புகையிலை பொருட்கள் மற்றும் 115 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல தாதாக்களிடம் பல போன்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
சிறைக்குள் சட்டவிரோத பொருட்கள் புழக்கத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் சஞ்சய் பெனிவால் உத்தரவிட்டுள்ளார்.