புதுடில்லி: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால், போட்டியிட ஓ.பி.எஸ்., தயாராக உள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியதாவது: தனிப்பட்ட முறையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை.
கட்சி விதிகளின்படியே 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகளுக்கு உட்பட்டே இதுநாள் வரை அதிமுக செயல்பட்டுவந்தது . விதிகளின்படி வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு நடத்த முடியும்.

பொதுக்குழுவுக்கும், சிறப்பு பொதுக்குழு கூட்டங்களுக்கு வித்தியாசம் உள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட முடியாது என ஜன.,28 ல் தேர்தல் ஆணையத்திற்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பழனிசாமியின் ஒரு தலைபட்ச முடிவால் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லாமல் போய்விடுமா? கட்சி விதிகளை காற்றில் பழக்கவிட்டு பழனிசாமி கூட்டம் நடத்தினார். ஒரு தலைபட்சமாக செயல்பட்டார்.
இரட்டை தலைமை பதவிகள் காலியாகவில்லை என்பதை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார். தனி நீதிபதியின் கருத்தை, ஐகோர்ட் அமர்வு கருத்தில் கொள்ளவில்லை.
தொண்டர்கள் மூலமே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இன்று தேர்தல் நடந்தாலும் நானே வெற்றி பெறுவேன். 1.5 கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்கு உள்ளது. பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால், போட்டியிட தயாராக உள்ளேன்.
இவ்வாறு பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் வாசித்து காட்டினார்.
அப்போது, கட்சி விதிகளை தமிழில் கூறும்படி நீதிபதி கூறினார். இதனையடுத்து, பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம், கட்சி விதிகளை படித்தார்.