புதுடில்லி:'விசா' காலம் முடிவடைந்த பின்னும், புதுடில்லியில் வசித்து வரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தபோது, 100க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் திரண்டு வந்து, போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்; கைது செய்தவர்களை விடுவிக்கும்படி கூச்சலிட்டனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. ஆப்ரிக்க நாடுகளைச்சேர்ந்தவர்கள் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டதால், அப்பகுதியில் திடீர் கலவரம் ஏற்பட்டது.
புதுடில்லியில், ஆப்ரிக்க நாட்டினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் பலர் விசா காலம் முடிந்தும், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லாமல் சட்டவிரோதமாக இங்கு வசித்து வருவதாக புகார் எழுந்தது.
மேல்படிப்புக்காக வந்த மாணவர்கள் மட்டுமின்றி, சிலர் வேலையும் செய்து வருகின்றனர்.
அதில், சில குறிப்பிட்ட நபர்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் ஈடுபட்டு வருவது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
புதுடில்லியின் நெப் சராய் பகுதியில், ஆப்ரிக்க நாட்டினர் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றனர்.
மூவர் கைது
இதில், சிலரின் விசா காலம் முடிவடைந்தும், அவர்கள் நாடு திரும்பாமல் இங்கு வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தெற்கு டில்லியின் நெப் சராய் பகுதியில் உள்ள, 'ராஜு பார்க்' என்ற இடத்திற்கு வந்தனர்.
விசா காலம் முடிந்தும் நாட்டை விட்டு வெளியேறாமல், முறைகேடாக தங்கியுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல், அந்த பகுதி முழுதும் காட்டுத் தீ போல பரவியது.
சில நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் அங்கு திரண்டு போலீசாரை வழிமறித்தனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர்.
ஆனால், 6 அடி உயரமும், ஆஜானுபாகுவான உடற்கட்டும் உடைய ஆப்ரிக்கர்கள், போலீசாரை அந்த இடத்தைவிட்டு வெளியேற விடாமல் வழிமறித்தனர். இதனால், அங்கு அசாதாரண சூழல் நிலவியது.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில ஆப்ரிக்க இளைஞர்கள், போலீசார் மீது கைவைத்து தள்ளினர்; சண்டை மூளும் சூழல் நிலவியது.
பிரச்னை
அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில், கைது செய்யப்பட்ட மூன்று ஆப்ரிக்கர்களில் இருவர் தப்பிச் சென்றனர். அதில், 22 வயதான பிலிப் என்பவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
அதன் பின், அன்று மாலை மீண்டும் வந்த போலீசார், ஒரு பெண் உட்பட நான்கு நைஜீரியர்களை கைது செய்தனர். அப்போதும், 150 - 200 ஆப்ரிக்கர்கள் வரை திரண்டு வந்து போலீசாருடன் பிரச்னை செய்தனர்.
நிலைமையை சமாளிப்பதற்காக, கைதானவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களை நைஜீரியாவுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
''போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த ஆப்ரிக்கர்கள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, தெற்கு டில்லி துணை போலீஸ் கமிஷனர் சந்தன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.