மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு:
மின் வாரியத்தை
மீட்டெடுக்க, கட்டண உயர்வே வழி என்ற நிலையில், கட்டண உயர்வு வாயிலாக,
ஆண்டுக்கு, 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தக் கட்டண உயர்வால், தற்போது ஆண்டுக்கு, 13 ஆயிரம் கோடி வருவாய் வரும்
என எதிர்பார்க்கிறோம். இதற்கு மேலும் கட்டணத்தைக் குறைத்தால் நிலைமை
மோசமாகி விடும். எனவே, வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் பொறுத்துக் கொள்ள
வேண்டும்.
'மாசம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும்'னு, சட்டசபை தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீங்களே... அது என்னாச்சு?
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் எஸ்.வேதாந்தம் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற கிராம கோவில்களுக்கான நலத்திட்ட விழாவில், பூஜாரிகள் காவி உடை அணிய, அதிகாரிகள் தடை விதித்து, வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வர உத்தரவிட்டுள்ளனர். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல, தமிழக அரசுக்கு காவியைப் பார்த்தாலே பயமாக உள்ளது.
காவி என்றாலே, பா.ஜ., தான் என அவர்கள் மனதில் பதிந்து விட்ட தவறான பிம்பமே இதற்கு காரணம்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'நீட்' தேர்வை ரத்து செய்ய, எங்களிடம் 'சூட்சுமம்' இருக்கிறது என, தேர்தலுக்கு முன்பும், 'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு பெறுவோம் என தேர்தலுக்கு பிறகும், தி.மு.க.,வினர் சொல்லி வந்தனர். இப்போது அது குறித்து வாயே திறப்பதில்லை. உச்ச நீதிமன்ற வழக்கில் வாய்தா வாங்குவது தான் வழக்கமாக இருக்கிறது. ஒருவேளை கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டத்தை வாபஸ் பெற்றது போல, 'நீட்' தேர்வு வழக்கையும் திரும்பப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அந்த வழக்கு தள்ளுபடி ஆகிடும் என்ற நம்பிக்கையில் தான், வாய்தா மேல வாய்தா வாங்கிட்டு இருக்காங்க, தெரியுமா?
ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை: அரசு ஊழியர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு, தமிழக அரசு பொங்கல், 'போனஸ்' அறிவித்துள்ளது. ஆனால், 2012 முதல் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மட்டும், போனஸ் மறுக்கப்படுகிறது.
மற்ற பகுதி நேர ஊழியர்களைப் போல, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, பகுதி நேர ஆசிரியர்களைபணி நிரந்தரம் செய்திருந்தால், இந்த கோரிக்கை எழுந்திருக்காது.
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளின், 'வரலாறு' என்ன என்பதையும் ஆசிரியர்கள் தெரிஞ்சுக்கணும்!
பா.ஜ., ஆதரவாளரும், சினிமா இயக்குனருமான பேரரசு அறிக்கை: திராவிட நாட்டை மொழிவாரியாக பிரித்து தெலுங்கர்களுக்கு ஆந்திரா, கன்னடர்களுக்கு கர்நாடகா, மலையாளிகளுக்கு கேரளா, தமிழர்களுக்கு தமிழகம் என பிரித்து விட்ட பின், இன்னும் நாம் மட்டும் திராவிடர்களாக அழைக்கப்படுவது ஏன்?
* நியாயமான கேள்வி தான்... ஆனா, இதுக்கு தி.மு.க.,வில் யாரிடமும் பதில் இருக்காது!