பிரபல நாட்டிய கலைஞர் ரோஜா கண்ணன் மாணவி வைஷ்ணவி வெங்கடேசனின் நடனம், தி.நகரில் நடந்தது.
முதலில் சம்பிரதாயமாக ஆடப்படும் தோடய மங்கலம், ராக மாலிகையில் நிகழ்ச்சியை துவக்கினார்.
'ஜெயஜானகி ரமன' கிருதியை, மிஸ்ர சாபுவிலும், 'சரணு சரணு' - கண்டசாபுவிலும், 'முரஹர ஜகதர' ஆதியிலும், 'தேவேச கனா' ரூபகத்திலும், 'மாதவ' ஆதி தாளத்திலும் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, நிகழ்ச்சியின் முக்கிய உருப்படியான வர்ணம், பத்மா சுப்ரமணியம் இயற்றிய உமையாள்புரம் கேசவராமன் ஜதி அமைப்பில், ராமபிரியா ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்தது.
இவ்வர்ணத்தில் பத்மாவதி தாயையும், ஏழு மலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியையும் பக்தியுடன் மனமுருகி வேண்டினார். அவரது அபிநயத்தில் அனைவருக்கும் பக்தி ஊற்றெடுத்தது மனதில்.
வர்ணத்தின் சஞ்சார பகுதிகளில், தான் வந்திருப்பதை அறியாதவாறு துயில் கொள்ளும் ஸ்ரீனிவாசனை, பிருகு முனிவர் காலால் எட்டி உதைக்கிறார்.
ஸ்ரீனிவாசனோ கோபம் கொள்ளாமல், முனிவருக்கு பாத பூஜை செய்து, அவரது கர்வத்தை போக்குகிறார். தன் தவறை உணர்ந்த முனிவர், ஸ்ரீனிவாசனிடம் அதீத அன்புகொள்கிறார்.
இந்த கதையையும், விஷ்ணுவின் பக்தனாக இருக்கும் யானையை, குளத்தில் முதலை கவ்வியதையும், யானையின் வேண்டுதலால், கருட வாகனத்தில் வந்து ஸ்ரீ சக்கரத்தால் முதலையின் தலையை துண்டித்த கதையும், மிகவும் எளிதாக புரியும்படி, நடனத்தில் காட்டினார் வைஷ்ணவி.
தொடர்ந்து, ராமனுஜருடைய கதையும் நிகழ்ச்சியின் நிறைவாக, திருப்பாவையை தன் நடனத்தின் வழியே கூறினார்.
'வாமன ரூபம் கொண்டு 3 அடி மண் கேட்டு இவ்வுலகை அளந்தவனே' என வரிகளுக்கு பொருள்படும்படி ஆடி, நடன திறமையை, சீறாக நிகழ்த்தினார் வைஷ்ணவி சீனிவாசன்.
-மா.அன்புக்கரசி.