வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தின் முதலாவது நடை மேடையில், சாக்கு மூட்டைகளுடன் மூன்று பெண்கள் நின்றிருந்தனர். சி.எம்.பி.டி., போலீசார், சந்தேகத்தில் சோதனை செய்ததில், 30 கிலோ கஞ்சா சிக்கியது.

கஞ்சாவை வைத்திருந்த சேலத்தை சேர்ந்த கல்பனா, 28; ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த நாகமணி, 30, குமாரி, 21 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், 2018 ஆக.,26ல் நடந்தது.
இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன் நடந்து வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களுக்கும் எதிராக, குற்ற பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார், வழக்கு ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். வழக்கு விசாரணையின்போது, 'முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகையில், மூன்று பெண்களிடம் இருந்து, 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது எனக் கூறப்பட்டது.
'தற்போது, 11 கிலோ தான் உள்ளது; 19 கிலோவை காணவில்லை. பறிமுதல் செய்த, 31 நாட்கள் கழித்து தான், நீதிமன்றத்தில் ஒப் படைத்து உள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு, 'பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலம், போலீஸ் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. நிலைய கட்டடம் பழுதடைந்து இருந்ததால், மழையால் பாதிக்கப்பட்டு, எலிகளும் கடித்ததால், கஞ்சா அளவு குறைந்து விட்டது' என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த நீதிபதி, 'மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடையையும், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதால், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களும் விடுவிக்கப்படுகின்றனர்' என, தீர்ப்பளித்தார்.
கடந்த, 2018ல், உத்தர பிரதேசத்தில், கடத்தல்காரர்களிடம் இருந்து, 581 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, எலிகள் தின்று விட்டதாக, நீதிமன்றத்தில், மதுரா மாவட்ட போலீசார் கூறிய சம்பவம் நடந்தது. அதுபோல், சென்னை போலீசாரும் தற்போது, எலிகளை தங்களுக்கு பாதுகாப்பாக்கி உள்ளனர்.