சென்னை: 'குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்தாமல், 125 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள, 3,049 வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபரின் பட்டியலை, குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 'டிமிக்கி' கொடுப்போருக்கு, வருவாய்த் துறை வழியாக 'ஜப்தி, சீல்' நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இதன் வாயிலாக ஆண்டுக்கு, 885 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம், 505 கோடி ரூபாயும், இதர உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள் மற்றும் லாரி குடிநீர் வழியாக, 380 கோடி ரூபாயும் கிடைக்கிறது.
இந்த வகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டு என, நுகர்வோரிடம் இருந்து வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படும்.
வீடுகளுக்கு குடிநீர், கழிவு நீர் வரியாக, ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு கட்டணம் மாறுபடும். மொத்தம், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். குடிநீர் இணைப்பு வழங்காத விரிவாக்க பகுதிகளில், வரி மட்டும் செலுத்துகின்றனர்.

இந்த வகையில், 2022 - 23ம் நிதியாண்டு, 885 கோடி ரூபாயும், முந்தைய ஆண்டுகளில் பாக்கி, 560 கோடி ரூபாயும் சேர்த்து, 1,445 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.
கடந்த 2022 டிச., 31ம் தேதி வரை, 765 கோடி ரூபாய் வசூலானது. இது, முந்தைய ஆண்டுகளை விட, 110 கோடி ரூபாய் அதிகமாக வசூலாகி உள்ளது. அதேவேளையில் வழக்கு, இதர காரணங்களுக்காக, 240 கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் உள்ளது.
மீதம், 440 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். இதில் அரசு துறைகள், 54 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. வீடுகள் வழியாக, 261 கோடி ரூபாயும், வணிகம் சார்ந்து 125 கோடி ரூபாயும் வசூலாக வேண்டும்.
இதில் முதற்கட்டமாக, 125 கோடி ரூபாயை வசூலிக்க, வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்களில், பல ஆண்டுகளாக பாக்கி வைத்துள்ள 3,049 பேரின் பெயர்களை, குடிநீர் வாரிய இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, பட்டியல் தயாரிக்கும் பணி வேகமாக நடக்கிறது. மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் வாயிலாக 'ஜப்தி, சீல்' வைப்பு போன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.
இதன் வாயிலாக, பல ஆண்டுகள் நிலுவை வைத்துள்ள தொகை வசூலாகும் என, வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

வரி, கட்டணத்தை நம்பி தான் வாரியம் உள்ளது. குடிநீர், கழிவு நீர் சேவை, ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறோம். சில வணிக நிறுவனங்கள், உயர்அதிகாரிகள், அரசியல்ாதிகள் பெயரைக் கூறி இழுத்தடிக்கின்றனர். இதனால, மாநகராட்சியை போல், வரி வசூலிக்க முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக, பல ஆண்டுகள் வரி செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுக்கும், 3,049 நிறுவனங்கள் பெயரை பொது வெளியில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
'ஜப்தி, சீல்' வைப்பு போன்ற நடவடிக்கையும் தொடரும். இதற்காக, இரண்டு துணை ஆட்சியர் தலைமையில், ஆறு தாசில்தார்களை நியமித்துள்ளோம்.
-
குடிநீர் வாரிய அதிகாரிகள்