சென்னை: சட்டசபையில் கவர்னர் உரையில் திராவிட மாடல் என்னும் வார்த்தையை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார். மேலும், தனது உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் எனக்கூறி முடித்துள்ளார். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கிடையே கவர்னர் பாதியிலேயே சபையில் இருந்து வெளியேறினார்.
இந்தாண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,9) கவர்னர் உரையுடன் துவங்கியது. அப்போது கவர்னர் உரையாற்றுகையில், 'திராவிட மாடல், அமைதி பூங்கா' போன்ற வார்த்தைகளை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் ரவி உரையாற்றியபோது
2, 3ம் பக்கங்களில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தார். அதில், 'வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்' என்ற வாக்கியம் இடம்பெற்றது. இதனை குறிப்பிடுவதை கவர்னர் தவித்தார்.
இதனைத்தொடர்ந்து 46ம் பக்கத்தில் இருந்த 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது' என்ற வாக்கியத்தையும் தவிர்த்தார். அதேபோல், தனது உரையின் இறுதியில் ஜெய்ஹிந்த் எனக் கூறி முடித்தார்.

கவர்னர் உரையில் திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட வாக்கியங்களை தவிர்த்தது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், 'அரசின் கொள்கை குறிப்பை, கவர்னர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது. அச்சிடப்பட்டதற்கு மாறாக கவர்னர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது' எனக் கூறினார்.
வெளியேறிய கவர்னர்

அச்சிடப்பட்டதை முழுமையாக படிக்காமல் கவர்னர் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது கவர்னர் ரவி சபையில் இருந்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து அதிமுக.,வினரும் முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இன்றைய கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் நிறைவு பெறும். ஆனால், அதற்கு முன்னதாகவே முதல்வர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கவர்னர் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி பெயரும் தவிர்ப்பு
கவர்னர் தனது உரையில், ஈவெரா, அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சி அமைத்ததும் சட்டசபை நிகழ்ச்சிகள் துவங்கும் முன், அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சபையில் உரையாற்றியபோது, முடிவில் 'ஜெய்ஹிந்த்' என கூறியதை திமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போதைய உரையின் இறுதியிலும் கவர்னர் ரவி ஜெய்ஹிந்த் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.