கரூர், ஜன. 9-
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் நாளை முதல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடக்கிறது. அதன்படி நாளை (ஜன.,10), கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 12-ல் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 20-ல் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 24-ல் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 27ல் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், 31-ல் தோகைமலை அரசு மேல்நிலை பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடக்கின்றன.
மேலும், பிப்., 3-ல் க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பிப்.,7ல் தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாற்றுத்திறனாளி குழந்தைகள் வட்டார அளவில் நடக்கும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சான்று பெறுதல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கு விண்ணப்பம் செய்தல், ஆதார் அட்டை எடுத்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தல், பிற உதவிகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.