சென்னை: சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது நாட்டை அவமதிக்கும் செயல் என சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறினார்.

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கவர்னர் ரவி உரையில் ஏற்கனவே அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும். தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் அவையிலிருந்து கவர்னர் புறப்படுவதே மரபு. கவர்னரின் செயல்பாடுகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய கவர்னர், அதனை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய அம்பேத்கரின் பெயரைக்கூட கவர்னர் உச்சரிக்கவில்லை. வேறு உயர்பதவிக்காக இது போன்று செயல்படுகிறாரோ என சந்தேகம் எழுகிறது. பாஜ., ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் வேறுபட்டு செயல்படுகிறார்கள்; அவர்களது நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
தேசிய கீதம் முடியும் வரை கவர்னர் இருந்திருந்தால் மகிழ்ச்சி; ஆனால் அவர் வெளியேறியது நாட்டை அவமதிப்பது போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரசு சார்பில் 5ம் தேதி அனுப்பிய உரைக்கு கவர்னர் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளார். 7ம் தேதியே கவர்னர் ஒப்புதல் வழங்கிய உரைக்கு பிறகும், அவர் சில வார்த்தைகளை புறக்கணித்தது ஏற்க முடியாதது.

தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே கவர்னர் வெளியேறினார். தேசிய கீதத்தை கவர்னர் அவமதித்தார். தேசிய கீதத்தை இசைப்பதற்கு முன்பே அதிமுகவினரும் வெளியேறியது அநாகரீகமான செயல். அரசின் உரையில் கவர்னர் மாற்றம் செய்வது மரபை மீறிய செயல் ஆகும்.

சமூக நீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை கவர்னர் தவிர்த்துள்ளார். உரையில் பத்தியில் மாறுப்பட்ட கருத்து இருந்தால் கவர்னர் அதை முன்பே கூறியிருக்கலாமே?. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
திமுக அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டசபையில் கவர்னர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?.
கவர்னர் கருத்துகளை, சட்டசபைக் நீக்க, சேர்க்க, சபாநாயகருக்கு அதிகார வரம்பு உள்ளதா?. கவர்னர் பேசிய பின்னர் மரபிற்கு புறம்பாக முதல்வர் குறுக்கிட்டுப் பேசியது முற்றிலும் தவறானது.
தமிழகம் என பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள நிலையில் கவர்னர் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ., எம்ஏல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சட்டசபைக்கு கவர்னரை அழைத்து அவமதித்துள்ளனர். கவர்னரை வைத்து தங்கள் சித்தாந்தத்தை புகழ்பாட வைக்க முடியாது. வாரிசு அரசியலை பேசாமல் பார்த்துக்கொள்ள கவர்னர் எதிர்பை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னருக்கு பழனிசாமி ஆதரவு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுகையில், 'கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. கவர்னர் சட்டசபையில் இருக்கும் போது, முதல்வர் தீர்மானம் கொண்டு வருவது அவை மரபுக்கு எதிரானது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. அமைதி பூங்காவாக இல்லை. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது' என்றார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கவர்னர் உரை என்றால், வருங்காலத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்க வேண்டும்; அந்தக் கனவை நனவாக்கும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும்; ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழக சட்டசபையில் வாசிக்கப்பட்ட கவர்னரின் உரை, தி.மு.க. ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கவர்னர் உரையில், தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலமைச்சர் அவர்கள் அயராத உழைப்போடும், அக்கறையோடும் அரசை வழிநடத்தி உள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை நிலை என்னவென்றால், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தமிழக மக்களை வீழ்ச்சியை நோக்கி தி.மு.க அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில், 'சட்டசபை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட கவர்னரை தமிழகம் இதுவரை கண்டதில்லை' எனக் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை: கவர்னர் உரையின்போது தமிழக சட்டசபையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழக சட்டசபை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. கவர்னர் உரையை தயாரித்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்த கருத்து வேறுபாடுகளை கவர்னர் மாளிகையும், அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டதால்தான் சட்டசபையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன' என்றார்.
இதற்கிடையே கவர்னர் செயலை கண்டித்து, வரும் ஜன., 13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.