வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தென்காசி: ரேஷன் கடை விற்பனையாளர் நேர்முகத் தேர்வு என்பது வெறும் கண்துடைப்பு என்றும், அந்த வேலைவாய்ப்பு திமுக.,வினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பதையும் திமுக கூட்டத்தில் வெளிப்படையாக தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் குத்துக்கல்வலசை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார். தென்காசி பார்லி., உறுப்பினர் தனுஷ் எம். குமார் முன்னிலை வகித்தார்.
அந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் பேசுகையில், மாவட்டத்தில் நிரப்பப்பட வேண்டிய கிராம உதவியாளர் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் பணிகளுக்கு நிறைய பேர் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர். 35 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 3500 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர் 48 ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு 4000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இருப்பினும் கட்சியினர் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரவை செயலாளர் என முக்கிய பிரமுகர் ஒருவருக்கு ஒரு பணியிடம் என பிரித்து வழங்கியுள்ளோம் என வெளிப்படையாக தெரிவித்தார். ரேஷன் கடை உதவியாளர் ரேஷன் கடை விற்பனையாளர் கிராம உதவியாளர் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேர்முகத் தேர்வினை அதிகாரிகள் நடத்துகின்றனர்.
இருப்பினும் அந்த நேர்முகத் தேர்வு என்பது வெறும் கண்துடைப்பு திமுகவினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை திமுக கூட்டத்தில் வெளிப்படையாக மாவட்ட செயலாளர் பேசினார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை
:
இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்த திமுக அரசு. திமுக தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் அரசு வேலை வாய்ப்புகளை தன் சொந்த கட்சிக்காரர்களுக்கே ஒதுக்குவதாக தெரிவிக்கும் இந்த காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.