'யார் கண்பட்டது என்றே தெரியவில்லை. அதற்குள் முட்டலும், மோதலும் துவங்கி விட்டது...' என, மஹாராஷ்டிராவில் ஆளும், பா.ஜ., - சிவசேனா அதிருப்தி குழு கூட்டணி குறித்து கவலைப்படுகின்றனர், அந்த மாநில மக்கள்.
இங்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து விட்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான, சிவசேனா அதிருப்தி குழு - பா.ஜ., கூட்டணி அரசு அமைத்தது.
ஏக்நாத் ஷிண்டேயுடன் இணைந்து, சிவசேனாவில் இருந்து வெளியேறிய, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர். துவக்கத்தில் அமைதியாக இருந்த அவர்கள், இப்போது நச்சரிக்கத் துவங்கியுள்ளனர்.
இதையடுத்து, கூட்டணி கட்சி தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிசுடன் இதுபற்றி பேசினார், ஷிண்டே.
பட்னவிசோ, 'அமைச்சரவையை, இப்போது விரிவாக்கம் செய்ய வேண்டாம். இன்னும் சில மாதங்கள் உருண்டோடட்டும். எங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களும் தான், அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிக்கின்றனர்; கேட்பவர்களுக்கு எல்லாம் பதவியை கொடுக்க முடியுமா...' என, முகத்தில் அடித்தார் போல கூறி விட்டார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த ஷிண்டே, பட்னவிஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். நாளுக்கு நாள் இவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிறது. 'அவசரம் அவசரமாக கூட்டணி அமைத்தீர்களே; இப்போது நன்றாக அனுபவியுங்கள்...' என, கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.