இந்திய ஜனநாயக கட்சியின், பெரம்பலுார் தொகுதி எம்.பி., பாரிவேந்தர்: சிறு வயதில், பெரிய பதவிக்கு வந்துள்ள, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மிகச் சிறந்த அறிவாளி. திறமையான அவர் இல்லா விட்டால், தமிழகத்தில் இன்று எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கும். பலதரப்பட்ட புள்ளி விபரங்கள்படி, பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அவரிடம் போட்டி போட்டு கேள்விகள் கேட்பது முறையல்ல.
டவுட் தனபாலு: இப்ப, தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்துல நின்னு ஜெயிச்சிருக்கீங்க... அடுத்த தேர்தல்ல,பா.ஜ.,வின் தாமரை சின்னத்துல நின்னுடலாம்கிற முடிவுக்கு வந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!
lll
பத்திரிகை செய்தி: 'போலீஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட, 30 கிலோ கஞ்சாவில், 19 கிலோவை எலிகள் சாப்பிட்டுருச்சு...' என,சென்னை நீதிமன்றத்தில் போலீசார் அளித்த பதில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய மூன்று பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.
டவுட் தனபாலு: பறிமுதல் செய்ததில், 19 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுருச்சு என கூசாம, அதுவும் கோர்ட்லயே சொல்லியிருக்காங்களே... அந்த எலிகளுக்கு நான்கு கால்களா அல்லது இரண்டு கால்களா என்ற இமாலய, 'டவுட்' எழுதே!
lll
தமிழக காங்., தலைவர் அழகிரி: காங்கிரசைச் சேர்ந்த, திருமகன் ஈ.வெ.ரா., மரணத்தால் காலியாகியுள்ள, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்., கட்சி மீண்டும் போட்டியிடும்.
டவுட் தனபாலு: பொதுவாக,கூட்டணி தர்மத்தின்படி, அந்த தொகுதியை உங்களுக்கு தான் தி.மு.க., ஒதுக்கும், ஒதுக்கணும்... ஒருவேளை, தி.மு.க., காலை வாரிட்டா என்ன பண்றதுங்கிற பயத்துல தான், இப்படி முந்திக்கிட்டு உங்க கட்சியே போட்டியிடும்னு அறிவிச்சுட்டீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே!
lll