பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:
'தமிழகத்தில்
எல்லா சினிமாக்களையும், ஒரு நிறுவனமே வெளியிட்டு, 'கார்ப்பரேட்' போன்று
கையகப்படுத்துகின்றனர்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
விமர்சித்துள்ளார். விரைவில், பா.ஜ., கூட்டணிக்கு அவர் வர வேண்டும்.
பா.ம.க., என்ற ஒட்டகம், தி.மு.க., கூட்டணிக்குள் தலையை நுழைத்தாலே, திருமா தானாகவே வெளியேறி, எதிரணியின் பக்கம் போயிடுவார்!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: கவர்னரின் உரையில், தி.மு.க.,வினர் என்ன குறை கண்டனர். சங்க இலக்கியங்களில், தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக, தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது கவர்னரின் கருத்து. அதை, தி.மு.க.,வினர் ஏற்க வேண்டும் என, கவர்னர் நிர்பந்திக்கவில்லை.
வழக்கம் போல கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக, திசை திருப்பும் முயற்சியாக, கவர்னரின் கருத்துக்கு, தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திசை திருப்பும் முயற்சியில், தி.மு.க.,வினருக்கு, 'டாக்டர்' பட்டமே தரலாமே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மக்களை வருத்தி, எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன் வர வேண்டும்.
'கரடிக்கு மரம் ஏற தெரியும்; இறங்க தெரியாது'ங்கிற மாதிரி, எண்ணெய் நிறுவனங்களுக்கு விலையை ஏத்த மட்டுமே தெரியும்; இறக்க தெரியாது!
பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா பேட்டி: ஒவ்வொரு பொங்கலுக்கும், 'திராவிட மாடல்' அரசின் ஊழல் வெளிச்சத்திற்கு வரும். அதுபோல, இந்தாண்டும் விவசாயிகளிடம் வாங்கும் கரும்பு கொள்முதலில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஒரு கரும்புக்கு கூலி உட்பட, 17 ரூபாய் மட்டுமே விவசாயிகளிடம் விலை பேசி உள்ளனர். போக்குவரத்து செலவு, 3 ரூபாய் மட்டுமே. ஆனால், கரும்புக்கு, 33 ரூபாய் என, பொய் கணக்கு எழுதுகின்றனர்.
அடுத்த பொங்கலுக்கு, 'எங்களிடம் கரும்பு வாங்குங்க' என, எந்த விவசாயியும் கேட்கவே மாட்டாங்க பாருங்க!
தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி: தமிழக அரசு, 'மக்கள் ஐ.டி.,' என்ற புதிய அடையாள அட்டை குறித்து கூறுகிறது. இதை நடைமுறைப்படுத்தும் முன் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஐ.டி.,யை உருவாக்கினால், மிகப்பெரிய குழப்பம் ஏற்படும்.
கவர்னர் ரவி, 'ஒட்டுமொத்த தேசமும், ஒரு கருத்தை சொன்னா, அதுக்கு எதிரா வேற ஒண்ணை தமிழகம் பேசும்'னு சொன்னது உண்மைதான்னு நிரூபிக்கிறாங்க பாருங்க!