''ஆவின் விவகாரத்துல, ரெண்டு அதிகாரிகளுக்கு சிக்கல் வந்திருக்குது பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கடந்த, 2021 பிப்ரவரிமாசம், அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி கட்டத்துல,தமிழகம் முழுக்க ஆவின்ல, 236 பதவிகளுக்கு ஆட்களை நியமிச்சாங்க... இதுக்கு, பல லட்சம் ரூபாய் கைமாறியதா புகார்கள் எழுந்துச்சு பா...
''இப்ப தி.மு.க., அரசு விசாரணை நடத்தி, 201 பேரை, 'டிஸ்மிஸ்' பண்ணிடுச்சு... இந்த நியமனங்களுக்கு, சென்னை ஆவின் தலைமை அலுவலகத்துல பணிபுரியும், சட்டப்பிரிவு துணை பதிவாளர், தலைமையிட துணை பதிவாளர் ஆகிய இரண்டு அதிகாரிகள் தான் மூளையா இருந்திருக்காங்க பா...
''இந்த ரெண்டு அதிகாரிகள் தான், புதிய நியமனங்களுக்கான பணி வரம்புகளை உருவாக்கி குடுத்திருக்காங்க... இதை வச்சு தான், மாவட்ட வாரியா நியமனமும் நடந்திருக்குது... இப்ப, இந்த அதிகாரிகளிடமும் விசாரணை துவங்கிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.
''மோதலுக்கு முற்றும் போட்டுட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சமீபத்துல, 'காவி இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும்... இல்லா விட்டால் அடிதான்... தமிழகத்துல தனித்து நின்றால், 1 சதவீத ஓட்டு கூட பா.ஜ.,வால வாங்க முடியாது'ன்னு சமூக வலைதளங்கள்ல, அ.தி.மு.க.,வினர் பதிவுகள் போட்டு தாளிச்சிட்டு இருந்தாங்களே...
''இதுக்கு தமிழக பா.ஜ., நிர்வாகிகளும், பதிலடி குடுத்துட்டு இருந்தாங்க... இதை பார்த்து அதிர்ச்சியான பழனிசாமி, தன் கட்சி மாவட்ட செயலர்கள் கூட்டத்துல, 'பா.ஜ.,வை விமர்சனம் பண்ணி பதிவுகள் போடாதீங்க... நம்ம கட்சியை அவங்க கட்டுப்படுத்தலை'ன்னு கண்டிப்பா சொல்லியிருக்காருங்க...
''அதே மாதிரி, தமிழக பா.ஜ., - ஐ.டி., அணி மாநில தலைவர் நிர்மல்குமாரும், 'நம்ம கூட்டணி கட்சி தலைவர்களை பற்றியும், கூட்டணிகுறித்தும் பா.ஜ., நிர்வாகிகள், தங்களது சொந்த கருத்துகளை பதிவிட்டா, அண்ணாமலை உத்தரவுப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'னு அறிவிச்சாரு...
''உடனே, 'சுவிட்ச் ஆப்' போட்ட மாதிரி, ரெண்டு தரப்புலயும் விமர்சன பதிவுகளை நிறுத்திட்டாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''பாதி பேருக்கு மறுபடியும், எம்.பி., 'சீட்' கிடைக்காதுன்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தி.மு.க.,வுலயா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஆமாம்... இப்ப, தி.மு.க.,வுக்கு, 20 லோக்சபா எம்.பி.,க்கள் இருக்காவ... சில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளும் எம்.பி.,யாக இருக்காவ வே...
''இதுல, 'பலர் டில்லியில மத்திய அமைச்சர்களை பார்த்து, தங்களது தொழில் வளர்ச்சிக்கான காரியங்களை சாதிச்சுக்கிடுதாவ... தொகுதி வளர்ச்சி பணியில பெருசா அக்கறை காட்ட மாட்டேங்காவ... கட்சியினரையும் மதிக்கிறது இல்லை'ன்னு உளவுத் துறை அறிக்கை, தலைமைக்கு போயிட்டு வே...
''குறிப்பா, கொலை வழக்குல சிக்கியவர், தொகுதியில அதிகாரிகளுடன் சண்டை போடுறவர்னு, சில எம்.பி.,க்களால கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர்னு உளவுத்துறை அறிக்கையில குறிப்பிட்டிருக்கு...
''தென் மாவட்ட எம்.பி., ஒருத்தர், 'தேர்தலப்ப, மக்களுக்கு பணம் கொடுத்து, ஜெயிச்சிடலாம்'னு அசால்டா சொன்னதும், தலைமை காதுக்கு வந்திருக்கு வே... எல்லாத்தையும் கூட்டி கழிச்சு, 10க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களுக்கு சீட் இல்லைங்கிறமுடிவுக்கு தலைமை வந்துட்டு... இளைஞர் அணி, மகளிர் அணிக்கு முக்கியத்துவம் தந்து, வேட்பாளர்களை தேர்வு செய்யவும் தலைமை திட்டமிட்டிருக்கு வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.