அண்ணா நகர்,நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, அண்ணா நகர் மேம்பாலத்தில் பராமரிப்பின்றி கிடந்த சுவர் பூங்காக்களை, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி சார்பில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், சென்னையை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அண்ணா நகர் மண்டலத்திற்குபட்ட அண்ணா நகர் 'ஆர்ச்' பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலத்தில், துறை சார்பில் 3 கோடி ரூபாய் செலவில், இரு பாதைகளிலும் சுவர் பூங்காக்கள், இரும்புகளில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.
அங்குள்ள 48 துாண்களில், 10 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல் மற்றும் வண்ண விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. ஆனால், போதிய நிதி இல்லாததால் பணிகள் அறைகுறையாக விடப்பட்டன.
அதேபோல, இரு துறைகளும் முறையாக பராமரிக்காமல் விட்டதால், மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட சுவர் பூங்காவில் இருந்த செடிகள் வாடின. அறைகுறையாக வண்ணம் பூசும் பணிகளால் பல லட்சம் வீணானது.
இதுகுறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் சுவர் பூங்காவில் வாடிய செடிகளை அகற்றி, புதிய செடிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'சுவர் பூங்காவில், நீண்ட நாட்கள் வாழக்கூடிய செடிகளும், அதற்கு ஏற்ப தண்ணீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, திருமங்கலம் மேம்பாலத்திலும் வாடிப்போன செடிகள் மாற்றி அமைக்கப்படும்' என்றனர்.